சி.வி.சண்முகம் பினாமி வேட்பாளரா? அந்தரங்கத்தை வெளியிடுவேன் என மிரட்டல்; அதிமுக நிர்வாகி திடீர் ராஜினாமா

விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் சி.வி.சண்முகம் எம்பி மீது அக்கட்சியை சேர்ந்த விழுப்புரம் தெற்கு நகர செயலாளர் பசுபதி உள்ளிட்ட நிர்வாகிகள் சிலர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். நேற்று முன்தினம் சி.வி.சண்முகத்திற்கு எதிராக அதிருப்தியாளர்கள் ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது. அதில் நகர செயலாளர் பசுபதி கூறுகையில், ‘விழுப்புரம் தொகுதிக்கு சி.வி.சண்முகம் தனது பினாமியை வேட்பாளராக தேர்வு செய்திருக்கிறார். இந்த தொகுதி வெற்றியை பாதிப்படையும் வகையில் செயல்பட்டு வருகிறார்’ என்றார். இந்நிலையில், நகர செயலாளர் பசுபதி நேற்று தன்னுடைய கட்சி பதவி, அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

பதவியை ராஜினாமா செய்த பசுபதி கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘சி.வி.சண்முகம் மீது நான் புகார் எழுப்பியதால் என்னை மனஉளைச்சல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். இதனால் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். மாற்று கட்சிக்கு செல்லபோவதில்லை. அதிமுக விசுவாசியாகவே இருப்பேன். இந்த மாவட்டத்தில் பெரும்பான்மை சமூகமாக ஆதிதிராவிடர்கள், வன்னியர்கள் உள்ளனர். ஆனால் மற்றொரு சமுதாயத்திற்கு 5 ஒன்றிய செயலாளர் பதவி வழங்கியுள்ளார். குறிப்பிட்ட சமூக மக்களை ஒதுக்கி வைக்கிறார். சி.வி.சண்முகம் தேர்தலின்போது செய்த அந்தரங்கங்களை நேரம் வரும்போது வெளியிடுவேன். தற்போது சொன்னால் அதிமுகவின் ஒட்டுமொத்த வெற்றியை பாதிக்கும் என்பதால் அதைசொல்லவில்லை. அதிமுகவில் சி.வி.சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணன் தலையீடுதான் தேர்தலில் அதிகரிக்கும். கட்சியில் வயது வித்தியாசம் பார்க்காமல் மரியாதை குறைவாக நடந்து கொள்வார். முகத்தில் சிகரெட் பிடித்து புகை விடுவார். இவரின் செயல்பாட்டால்தான் கடந்தமுறை அதிமுக விழுப்புரத்தில் தோற்றது’’ என்றார்.

* கூட்டணி கட்சிகளை நம்பினால் தேர்தலில் வெற்றி பெற முடியாது
மரக்காணத்தில் நடந்த கூட்டத்தில், பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ‘‘கூட்டணி கட்சிகளையே நம்பிக்கொண்டு இருந்தால் நாம் தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது. இதனால் பொதுமக்களிடம் சென்று தினந்தோறும் வாக்கு சேகரிக்க வேண்டும்’’ என கூறினார்.

Related Stories: