கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 79 உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்தி வருகிறது. மேற்குவங்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது வெறும் 15 அதிகாரிகள் மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
ஆனால், தற்போது நடைபெறவுள்ள தேர்தலையொட்டி முன்னெப்போதும் இல்லாத வகையில் 79 உயர் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது. இதில் மாநில தலைமைச் செயலாளர் நந்தினி சக்ரவர்த்தி, போலீஸ் டிஜிபி பியூஷ் பாண்டே மற்றும் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் சுப்ரதிம் சர்க்கார் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் அடங்குவர். இந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், ‘தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானது மற்றும் உள்நோக்கம் கொண்டது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 324ன் கீழ் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், அது மாநில நிர்வாகத்தையே சிதைக்கும் வகையில் இருக்கக்கூடாது. தலைமைச் செயலாளர் போன்ற உயர்மட்ட அதிகாரிகளை நீக்குவது ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் முடக்கிவிடும்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் பணிகளை செய்ய தகுதியற்றவர்கள் என்று கூறி இடமாற்றம் செய்யப்பட்ட இதே அதிகாரிகளை, மற்ற மாநிலங்களுக்கு தேர்தல் பார்வையாளர்களாக ஆணையம் நியமித்துள்ளது முரண்பாடாக உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக மேற்குவங்க மக்கள் பிரதிநிதிகள் கொண்டு வந்த கண்டன தீர்மானத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த இடமாற்றங்கள் நடந்துள்ளன’ என்று தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்யவே சட்டத்திற்கு உட்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என்று வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இந்த இடமாற்றங்கள் பொதுமக்களின் நலனை பாதித்துள்ளதா அல்லது தேர்தல் ஆணையம் தனது அதிகார வரம்பை மீறியுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்று தெரிவித்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளை (மார்ச் 25) நடைபெறவுள்ளது.
