தமிழ்நாடு உட்பட 5 மாநில தேர்தலுக்கு பின் ஒன்றிய மோடி அரசு கவிழ்ந்துவிடும்: டெல்லி மாஜி முதல்வர் கெஜ்ரிவால் கணிப்பு

 

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்து ஆம்ஆத்மி தலைவரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரை கடந்த பிப். 27ம் தேதி நீதிமன்றம் விடுவித்தது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு மிகுந்த அரசியல் பலத்துடன் செயல்பட்டு வரும் கெஜ்ரிவால், பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் கமேனி காலமானதைத் தொடர்ந்து, மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழலால் இந்தியாவின் எரிசக்தி மற்றும் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் இந்த சூழலால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்ததுடன், பங்குச்சந்தையிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. போர் சூழலை முன்கூட்டியே அறிந்திருந்தும் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க ஒன்றிய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வந்தார்.

இந்தச் சூழலில், டெல்லியில் நேற்று சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கெஜ்ரிவால், ‘2026ம் ஆண்டுக்குள் மத்தியில் ஆளும் பாஜக அரசு கவிழ்ந்துவிடும். தற்போதைய புவிசார் அரசியல் நெருக்கடி மற்றும் உள்நாட்டு அரசியல் மாற்றங்கள் இதற்கு வழிவகுக்கும். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல்கள் மத்தியில் ஆட்சி மாற்றத்திற்கான தொடக்கமாக அமையும்.

சஞ்சய் ராவத் போன்ற தலைவர்களுடன் இணைந்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவின் பெரும்பான்மைக்கு சவால் விடும் வகையில் ஓரணியில் திரண்டுள்ளன’ என்று பேசினார்.
கெஜ்ரிவாலின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் மோடி பேசுகையில், ‘எரிசக்தி இறக்குமதியை இந்தியா ஏற்கனவே பல்வகைப்படுத்தியுள்ளது. நாட்டின் உணவு மற்றும் உர கையிருப்பு பாதுகாப்பாக உள்ளது. உலகளாவிய நெருக்கடியைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் மக்களிடையே அச்சத்தை பரப்புகின்றன’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: