புதுடெல்லி: நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் புதிய கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு விதித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் கள்ள மார்க்கெட்டில் பல ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தால் எரிவாயு விநியோகம் முற்றிலும் சீர்குலைந்து பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நிலவும் இந்த நெருக்கடியால், சமையல் எரிவாயு இறக்குமதி பெருமளவு பாதிக்கப்பட்டு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் ஒன்றிய அரசு தரப்பில், ‘பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு இல்லை’ என்றும், சுமார் 50 நாட்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு கைவசம் இருப்பதாகவும் உறுதி அளித்திருந்தது. அப்போது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் 100 சதவீதம் அளவிற்கு மேல் இயங்குவதாகவும், பெட்ரோல் பங்குகளில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும் அதிகாரிகள் பெருமிதம் தெரிவித்தனர்.
ஆனால் இன்றைய நிலவரப்படி, எரிவாயு விநியோகம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இந்தியாவின் சமையல் எரிவாயு தேவையில் 60 சதவீதம் இறக்குமதியை நம்பியே உள்ளது. இதில் 90 சதவீதம் எரிவாயு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் கொண்டு வரப்படுகிறது. தற்போது அங்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து தடையால், இம்மாத முதல் பாதியில் எரிவாயு நுகர்வு 17.7 சதவீதம் வரை குறைந்துள்ளது. முறையான நீண்டகால திட்டம் இல்லாத காரணத்தால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உள்நாட்டு உற்பத்தியை முழுமையாக வீட்டு உபயோகத்திற்கு மாற்றினாலும் தட்டுப்பாட்டை குறைக்க முடியாமல் ஒன்றிய அரசு திணறி வருகிறது.
தற்போது எரிவாயு சிலிண்டர்களின் விலை கள்ளச் சந்தையில் விண்ணைத் தொட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக ஒரு சமையல் காஸ் சிலிண்டர் 913 முதல் 1,000 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய நிலையில், பெங்களூரு போன்ற நகரங்களில் 5,000 ரூபாய் முதல் ரூ. 8,000 வரை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் 2,000 ரூபாய் மதிப்புள்ள வர்த்தக சிலிண்டர்கள் 8,000 ரூபாய் முதல் ரூ. 15000 வரை ரகசியமாக விற்கப்படுகின்றன. பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களின் கிராமப்புறங்களில் 4,000 ரூபாய் கொடுத்தால் தான் சிலிண்டர் கிடைக்கும் என்ற அவல நிலை உருவாகியுள்ளது. இதனைத் தடுக்க வேண்டிய ஒன்றிய அரசு வெறும் பார்வையாளராகவே இருப்பதாக மக்கள் கொந்தளிப்புடன் தெரிவிக்கின்றனர்.
வழக்கமான விநியோகத்தை சீர்செய்ய முடியாத நிலையில், சமையல் எரிவாயு முன்பதிவு செய்வதில் புதிய கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு திணித்துள்ளது. அதன்படி நகரங்களில் வசிப்பவர்கள் 25 நாட்களுக்கு ஒருமுறையும், கிராமப்புற மக்கள் 45 நாட்களுக்கு ஒருமுறையும் மட்டுமே இனி எரிவாயு முன்பதிவு செய்ய முடியும். இந்த இடைவெளி அதிகரிப்பு காரணமாக நடுத்தர வர்க்கத்தினர் உணவகங்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் தீர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் முன்பதிவு செய்ய அலைமோதுவது நாடு முழுவதும் ஒருவித பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
வர்த்தக ரீதியிலான பயன்பாட்டிற்கு வழங்கப்படும் எரிவாயுவில் 50 சதவீதம் வரை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டல்கள் மற்றும் சிறு தொழில்கள் நலிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலைமையை சீர்செய்ய முடியாமல் மாநிலங்களுக்கு கூடுதலாக 48,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கி அதனை பயன்படுத்துமாறு ஒன்றிய அரசு கைவிரித்துள்ளது. நவீன காலத்திலும் மீண்டும் பழைய காலத்திற்கு மக்களை தள்ளும் இந்த பின்னோக்கிய நடவடிக்கை பெரும் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது. எரிவாயுவை பதுக்குபவர்களை பிடிக்க போலீசார் சுமார் 1,800 இடங்களில் சோதனை நடத்தியும் கள்ளச் சந்தை விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை.
மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் எரிவாயு முகவர் நிலையங்களுக்கு முன்னால் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். அரியானா மற்றும் டெல்லியில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எரிவாயு கையிருப்பு தற்போது வெறும் 64 சதவீதம் மட்டுமே உள்ளது. இதனை வைத்து இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே சமாளிக்க முடியும் என்பதால், அடுத்து வரும் நாட்கள் பெரும் போராட்டமாக அமையும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த இக்கட்டான சூழல் குறித்து பெட்ரோலிய அமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நாட்டில் சமையல் எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோகத்தில் உள்ள சிக்கல்களைக் களைய கடந்த 8ம் தேதி வெளியிடப்பட்ட புதிய உத்தரவின் படி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். வெளிநாடுகளில் இருந்து எரிவாயுவை கொண்டு வர மாற்று வழிகளை ஆராய்ந்து வருகிறோம். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை’ என்று தெரிவித்தார். எனினும் ஒன்றிய அரசின் இந்த அறிவிப்புகள் வெறும் காகித அளவிலேயே இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
