ஓமன் நாட்டில் வெள்ளப்பெருக்கில் சிக்கி பாலக்காட்டை சேர்ந்த மூன்று பேர் பலி

பாலக்காடு : ஓமன் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பாலக்காட்டை சேர்ந்த 3 பேர் பலியாகினர். பாலக்காடு மாவட்டம் பட்டித்தராவை சேர்ந்தவர் லுபிஷாத் (40). சைக்கிள் வியாபாரி. இவரின் மனைவி ஷாமிலா (32). பாலக்காடு அடுத்த திருத்தாலா தெற்கு தச்சரத்தோடியலைச் சேர்ந்த முகமதுகுட்டியின் மனைவி ரம்லத் (58).

இவரது மகன் பஹத் (எ) யூசப் (37). லுபிஷாத் மற்றும் பஹத் இருவரும் குடும்ப நண்பர்கள். இவர்கள் ஓமன் நாட்டில் தொழிலதிபர்கள்.அங்கு தங்கியபடியே குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மார்ச் 21ம் தேதி லுபிஷாத்-ஷாம்லா தம்பதி, அவரது குழந்தைகளான பதுலி, பேபா, பஹத்-பர்சு தம்பதி, பஹத்தின் தாய் ரம்லத் மற்றும் அவரது குழந்தைகள் ஹானி, நாஜி உள்ளிட்ட 9 பேர் ஒரே காரில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஓமன் நாட்டின் சுக்கி பகுதியில் திடீரென பெய்த கனமழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், கார் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதில் லுபிஷாதின் மனைவி ஷாமிலா (32), பஹத் (எ) யூசப் ஆகிய இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இருவரின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்ட நிலையில் பர்கா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பினர்.

வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 4 குழந்தைகள், லுபிஷாத், பர்சு ஆகியோர் உட்பட 6 பேரை பர்கா போலீசார் மீட்டனர். மேலும் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான ரம்லத்தை அந்நாட்டை சேர்ந்த பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று சடலமாக மீட்டனர். இச்சம்பவம் திருத்தாலா பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: