பல்கலைக்கழக விதிகளுக்கு எதிராக போராட்டம் ராகுல், திமுக எம்பிக்கள் மீதான விசாரணைக்கு தடை: டெல்லி ஐகோர்ட் உத்தரவு

 

புதுடெல்லி: பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் மீதான விசாரணைக்கு டெல்லி ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி பல்கலைக்கழக மானியக் குழுவின் துணைவேந்தர் நியமனம் மற்றும் பேராசிரியர்களுக்கான தகுதி குறித்த வரைவு விதிகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது.

திமுக சார்பில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், திமுக எம்பிக்கள் கனிமொழி, ஏ.ராஜா, பி.வில்சன், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த போராட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக எம்எல்ஏ எழிலரசன் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி அனுப் ஜெயராம் பம்பானி விசாரித்தார்.

அப்போது இந்த வழக்கில் டெல்லி போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என்பது தெரியவந்தது. எழிலரசனுக்கு மட்டும் மின்னஞ்சல் மூலம் நோட்டீஸ் அனுப்பிவிட்டு, மற்ற 10 பேருக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து, நேற்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘பிஎன்எஸ் சட்டப்பிரிவு 215ன் படி, குறிப்பிட்ட சில குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றங்கள் விசாரணைக்கு எடுப்பதில் உள்ள கட்டுப்பாடுகளின் அடிப்படையில், இந்த வழக்கு விசாரணைக்கும் மற்றும் மேல் விசாரணைக்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.

மேலும், இது தொடர்பாக டெல்லி போலீசார் ஆறு வார காலத்திற்குள் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஆகஸ்ட் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் மீதான நடவடிக்கைகளுக்கு தடை நீடிக்கும். முன்னதாக இந்த வழக்கு ஏப்ரல் 14ம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: