நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சேவை எண் 1950 குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு

நெல்லை : பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சேவை எண் 1950 குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நெருப்பு மூலம் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுகுமார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் வரும் சட்டமன்ற பொது தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும். என்பதை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வாக்காளர்களிடையே தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

100% வாக்குப்பதிவை வலியுறுத்தியும், தேர்தல் தொடர்பாக மக்களிடம் உள்ள சந்தேகங்களை தீர்க்கும் வகையிலும், நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சேவை எண் 1950ஐ நெருப்பு மூலம் வெளிப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது. 700 கிலோ நூல் கயிறு கொண்டு, பிரம்மாண்டமான முறையில் “1950” என்ற தொலைபேசி எண்ணை வடிவமைத்து, அதனை நெருப்பில் ஒளிரச் செய்தனர்.

தொடர்ந்து, 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுகுமார் தலைமையில் வ.உ.சி. மைதானத்தில் இருந்த பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பொதுமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்லும்போது, மின்னணு இயந்திரங்கள் மூலம் எளிதாக வாக்களிப்பது என்பது குறித்தும், வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்வது, புதிய வாக்காளர் பெயர் சேரப்பது, முகவரி மாற்றம் உள்ளிட்ட வாக்களிப்பது குறித்து பல்வேறு செயல்முறை விளக்கங்கள், தொடர்ந்து மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்) லதா, நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க பொதுச்செயலாளர் கோ.கணபதி சுப்பிரமணியன், ஸ்காட் பொறியியல் கல்லூரி முதல்வர் கணேசன், நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்க பொறுப்பாளர் கவிஞர் பாப்பாக்குடி செல்வமணி, கிராம உதயம் துணை இயக்குநர் வழக்கறிஞர் பகத்சிங் புகழேந்தி, கல்லூரி அகாடமி பொறுப்பாளர் சுந்தர்ராஜன், சேரன்மகாதேவி வருவாய் ஆய்வாளர் வேடசாமி, கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜான்சேகர், பேராசிரியர். கார்த்திக் கணேஷ் சேரன்மகாதேவி தமிழ் பேரவை பொருளாளர் புலவர் பொன்னழகன், அரசு உயர்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் நயினார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: