மஞ்சூர் : குந்தா பாலம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஜன்னலை உடைத்த கரடி மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை கீழே தள்ளி நாசம் செய்தது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அரசுப் பள்ளி வளாகங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்களின் கதவுகளையும் கரடிகள் உடைத்து சமையல் பொருட்களை வாரியிறைத்து நாசம் செய்வதும் அதிகரித்துள்ளது. குந்தா பாலம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
சுகாதார நிலையத்தை ஒட்டி மற்றொரு அறையில் செவிலியர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உலா வந்த கரடி சுகாதார நிலையத்தின் கதவை உடைக்க முயன்றுள்ளது. பின்புறம் சென்ற கரடி அங்கிருந்த ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே நுழைய முற்பட்டுள்ளது. ஆனால் ஜன்னலின் உட்புறம் இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டிருந்ததால் கரடியால் உள்ளே நுழைய முடியவில்லை.
இதைத்தொடர்ந்து ஆக்ரோசம் அடைந்த கரடி உட்புறமாக கையை விட்டு ஜன்னல் ஓரத்தில் இருந்த அலமாரியை தள்ளி விட்டுள்ளது. இதில் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தரையில் விழுந்து நாசமானது.
தகவலறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். இதேபோல் கொட்டரகண்டி பகுதியில் கடந்த ஒரு வாரமாக கரடிகள் வீடுகளின் கதவுகளை உடைத்து பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து நேற்று முன் தினம் இரவும் இரண்டு கரடிகள் அப்பகுதியில் உள்ள மூன்று வீடுகளின் கதவை உடைக்க முற்பட்டுள்ளது.
சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் வெளியில் வந்து பார்த்து சத்தம் போட்டவுடன் கரடிகள் அங்கிருந்து ஓடி மறைந்துள்ளது. இதை தொடர்ந்து இளைஞர்கள் சிலர் அப்பகுதியில் நெருப்பு மூட்டி இரவு முழுவதும் காவல் காத்துள்ளனர். மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் கரடிகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
