ஊட்டி : சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சீரற்றமயமாக்கல்முறையில் 2720 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது.
இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 30ம் தேதி துவங்குகிறது. தேர்தலை சுமூகமாகவும், நேர்மையாகவும் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஊட்டி பிங்கர்போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது 1662 வாக்குபதிவு இயந்திரங்கள், 1022 கட்டுபாட்டு இயந்திரங்கள், 1016 விவிபேட் என மொத்தம் 3700 இயந்திரங்கள் உள்ளன.
நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய தொகுதிகளுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் ஆகியவை கணினி மூலம் சீரற்ற சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணிகள் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது.
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்து சீரற்றமயமாக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியை மேற்கொண்டார். தொடர்ந்து பிங்கர்போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கிடங்கு திறக்கப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக சரி பார்த்து அனுப்பி வைக்கும் பணிகள் நடந்தது.
ஊட்டி கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் முதற்கட்ட சுழற்சி முறையில் மூன்று தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஊட்டி தொகுதியில் உள்ள 254 வாக்குசாவடிகளுக்கு தலா 304 மின்னணு வாக்குபதிவு மற்றும் கட்டுபாட்டு இயந்திரங்களும், 330 விவிபேட் இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல் கூடலூர் தொகுதியில் உள்ள 238 வாக்குசாவடிகளுக்கு 285 வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுபாட்டு இயந்திரமும், 309 விவிபேட் இயந்திரமும், குன்னூர் தொகுதியில் உள்ள 244 வாக்குசாவடிகளுக்கு 292 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 317 விவிபேட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
3 தொகுதிகளிலும் மொத்தமுள்ள 736 வாக்குசாவடிகளுக்கு தலா 882 மின்னணு வாக்குப்பதிவு மற்றும் கட்டுபாட்டு இயந்திரங்களும் (20 சதவீதம் கூடுதல்), 956 விவிபேட் இயந்திரங்கள் (30 சதவீதம் கூடுதல்) என மொத்தம் 2720 இயந்திரங்கள் லாரிகள் மூலம் பாதுகாப்பாக அனுப்பப்பட்டுள்ளது.
ஊட்டி தொகுதிக்கான இயந்திரங்கள் ஊட்டி பிரிக்ஸ் பள்ளியிலும், கூடலூர் தொகுதிக்கு புனித தாமஸ் பள்ளியிலும், குன்னூர் தொகுதிக்கு பிராவிடன்ஸ் பெண்கள் கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது.. மேலும் சிசிடிவி கேமரா, வெப் கேமரா மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் முழுமையான பாதுகாப்புகளுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி நிஷா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அபிலாஷா கௌர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் பழனிசாமி, புனிதா, தேர்தல் வட்டாட்சியர் காயத்திரி, வட்டாட்சியர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
