கேரளாவில் 140 தொகுதிகளுக்கு 1269 பேர் வேட்பு மனு தாக்கல்

திருவனந்தபுரம்: தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. கேரளா, அசாம், புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் மொத்தம் 140 தொகுதிகள் உள்ளன. தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே இருப்பதால் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாஜ உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் நேற்று முன் தினம் தான் இறுதி வேட்பாளர் பட்டியலை அறிவித்தன.

கேரளாவில் பல்வேறு தொகுதிகளில் இடதுசாரி, காங்கிரஸ், பாஜ கூட்டணிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டம் தர்மடம் தொகுதியில் தொடர்ந்து 3வது முறையாக போட்டியிடுகிறார். இவரது மருமகனும், அமைச்சருமான முகம்மது ரியாஸ் கடந்த முறை வெற்றி பெற்ற அதே பேப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.இடதுசாரி கூட்டணியில் 14 அமைச்சர்கள் மீண்டும் போட்டியிடுகின்றனர். இந்தநிலையில் கேரளாவில் வேட்பு மனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 1269 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories: