புதுடெல்லி: அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான மேற்கு ஆசியா போர் குறித்தும் அதன் தாக்கங்கள் குறித்தும் பிரதமர் மோடி மக்களவையில் நேற்று உரையாற்றிய போது கூறியதாவது: மேற்கு ஆசியா போர் உலக நாடுகளின் பொருளாதாரத்துக்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி போன்ற முக்கிய வழித்தடங்களை தடுப்பதும், அங்கு வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களும் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை. இவ்வழித்தடம் தடைபட்டுள்ள போதிலும், நமது தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்து வருகிறோம். போர் சூழலுக்கு மத்தியிலும், பேச்சுவார்த்தை மூலம் இந்தியா மேற்கொண்ட தொடர் முயற்சிகளால், ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியிருந்த நமது பல கப்பல்களும் இந்தியாவிற்கு வந்துள்ளன.
கடந்த 11 ஆண்டுகளில், நெருக்கடி காலங்களுக்காக கச்சா எண்ணெயைச் சேமித்து வைப்பதற்கு இந்தியா முன்னுரிமை அளித்துள்ளது. இன்று, நம்மிடம் 53 லட்சம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான பெட்ரோல் இருப்பு உள்ளது. இதை 65 லட்சம் மெட்ரிக் டன்களுக்கும் மேலாக அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர, உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்களிடமும் இருப்புக்கள் உள்ளன. கடந்த 11 ஆண்டுகளில், நமது சுத்திகரிப்புத் திறன் கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும், நமது எரிசக்தி இறக்குமதி ஆதாரங்களை கணிசமாகப் பன்முகப்படுத்தியுள்ளோம். முன்பு, நாம் 27 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோம்.
இன்று, 41 நாடுகளில் இருந்து எரிசக்தியை இறக்குமதி செய்கிறோம். எங்கெல்லாம் சாத்தியமோ, அங்கிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடையின்றி தொடர்வதை உறுதி செய்வதே எங்களின் முயற்சி. எனவே, விநியோக இடையூறுகள் இருந்தபோதிலும், இந்தியா தனது எரிசக்தித் தேவைகளைத் திறம்பட நிர்வகித்து வருகிறது. பொருளாதார பாதிப்புகளை சமாளிக்க அரசு விரிவான குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால உத்தியுடன் செயல்பட்டு வருகிறது. வலுவான பொருளாதார அடிப்படைகள், துறைசார் பங்குதாரர்களுடன் ஆலோசனைகள் மற்றும் இறக்குமதி-ஏற்றுமதிச் சங்கிலியில் எழும் ஒவ்வொரு சிக்கலையும் மதிப்பிட்டுத் தீர்ப்பதற்காகத் தினமும் அமைச்சகங்களுக்கு இடையேயான குழு கூடி ஆலோசிக்கிறது.
அரசும் தொழில்துறையும் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு முயற்சிகளின் மூலம், இந்தச் சூழல்களை நாம் திறம்பட எதிர்கொள்ள முடியும் என்பதில் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். இப்போரினால் விவசாயத் துறையில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. எனினும், நாட்டின் விவசாயிகள் உணவு தானியக் கையிருப்பைப் போதுமான அளவு வைத்துள்ளனர். உணவுப் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா முழுமையாகத் தயாராக உள்ளது. காரிப் பருவத்திற்கான விதைப்புப் பணிகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
இதற்காக, எத்தகைய அவசரச் சூழலையும் சமாளிக்கும் வகையில், உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான போதுமான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது. கடந்த காலங்களிலும் கூட, எந்தவொரு உலகளாவிய நெருக்கடியும் நமது விவசாயிகளைப் பாதிக்காத வகையில் எங்கள் அரசு செயல்பட்டுள்ளது. போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 3,75,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்பியுள்ளனர். ஈரானிலிருந்து மட்டும் சுமார் 1,000 இந்தியர்கள் திரும்பியுள்ளனர். பொய்களைப் பரப்புதல், கள்ளச்சந்தையில் ஈடுபடுதல் அல்லது பதுக்கல் போன்றவற்றின் மூலம் இந்தச் சூழ்நிலையைச் சுரண்ட முயல்பவர்களுக்கு எதிராக கடுமையான கண்காணிப்பையும் விரைவான நடவடிக்கையையும் அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும்.
தேசத்தின் கூட்டு உறுதிப்பாட்டின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளேன். அரசும் ஒவ்வொரு குடிமகனும் ஒன்றிணைந்து நடக்கும்போது, நாம் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ள முடியும். இதுவே நமது அடையாளம், இதுவே நமது பலம். இந்தப் போரினால் ஏற்பட்ட கடினமான உலகளாவிய நிலைமைகள் நீண்ட காலத்திற்கு நீடிக்க வாய்ப்புள்ளது. கொரோனா தொற்று காலகட்டத்தில் நாடு ஒன்றுபட்டு நின்றதைப் போலவே, இப்போதும் தயாராகவும் ஒற்றுமையாகவும் நாம் இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
வெறும் வார்த்தை ஜாலம்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘மக்களவையில் பிரதமர் மோடி ஆற்றிய உரை வழக்கத்திற்கு மாறாக குறுகிய நேரமே நீடித்தது. வழக்கம் போல் சுயதம்பட்டம், கோழைத்தனம், ஒருதலைப்பட்சமான வார்த்தை ஜாலங்களின் சிறந்த உதாரணமாக அந்த உரை அமைந்திருந்தது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து ஒரு வார்த்தை கூட அவரது உரையில் இடம் பெறவில்லை’’ என்றார்.
