தங்கம் கடத்தலில் ரூ.102.55 கோடி மோசடி வழக்கு நடிகை ரன்யா மீது 2,500 பக்க குற்றப்பத்திரிகை: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

 

பெங்களூரு: ஆப்பிரிக்காவிலிருந்து துபாய் வழியாக இந்தியாவிற்கு தங்கம் கடத்திய விவகாரத்தில் கன்னட நடிகை மற்றும் அவரது கூட்டாளிகள் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.கர்நாடக மாநிலத்தின் உயர் போலீஸ் அதிகாரியின் வளர்ப்பு மகளும், கன்னட நடிகையுமான ரன்யா ராவ், சர்வதேச அளவில் தங்கம் கடத்தும் கும்பலுடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.

கடந்த 2023ம் ஆண்டில் துபாயை மையமாக வைத்து ‘வீரா டைமண்ட்ஸ் டிரேடிங்’ என்ற நிறுவனத்தை தொடங்கினர். தொடக்கத்தில் உகாண்டா, கென்யா மற்றும் தான்சானியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து நேரடியாக தங்கம் வாங்க முயன்றனர். அப்போது உகாண்டா ஏஜென்ட் ஒருவரால் ரன்யா ராவ் 2 கோடி ரூபாய் ஏமாற்றப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, தனது செயல்பாடுகளை துபாய்க்கு மாற்றிய ரன்யா ராவ், அங்குள்ள டெய்ரா கோல்டு சூக் சந்தையில் ஆப்பிரிக்க வியாபாரிகளிடமிருந்து தங்கம் வாங்க ஆரம்பித்தார். இதற்காக அவர் பெரும் தொகையை ரொக்கமாக கையாண்டுள்ளார். இவருக்கு உதவியாக பெல்லாரியைச் சேர்ந்த தங்கம் வியாபாரி தருண் கொண்டுரு செயல்பட்டுள்ளார். இவர்கள் துபாயிலிருந்து சுவிட்சர்லாந்து அல்லது தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு தங்கம் கொண்டு செல்லப்படுவதாக போலி ஆவணங்களைத் தயாரித்து, ரகசியமாக இந்தியாவிற்கு கடத்தி வந்தனர்.

கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில், ரன்யா ராவ் சுமார் 15 முறை துபாயிலிருந்து இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளார். இந்த காலகட்டத்தில் மொத்தம் 102.55 கோடி ரூபாய் மதிப்பிலான 127.28 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கடத்தி வரப்பட்ட தங்கம் உள்நாட்டு சந்தையில் நகை வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு, அந்த பணம் ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு கிலோ தங்கம் கடத்துவதற்கு ரன்யா ராவ் 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை கமிஷன் பெற்றுள்ளார். தொடர்ந்து தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வந்த ரன்யா ராவ், கடந்த 2025ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி திங்கட்கிழமை அன்று துபாயிலிருந்து பெங்களூரு விமான நிலையம் வந்தபோது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 15 நாட்களில் அவர் மேற்கொண்ட 4வது துபாய் பயணம் என்பதால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர்.

அப்போது தனது உடலில் மறைத்து வைத்து கடத்தி வந்த 12.56 கோடி ரூபாய் மதிப்பிலான 14.2 கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த 102.55 கோடி ரூபாய் மோசடி ெதாடர்பாக ரன்யா ராவிற்கு சொந்தமான 34 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த சர்வதேச கடத்தல் நெட்வொர்க்கில் தொடர்புடைய மற்ற நபர்களை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘பெங்களூருவில் உள்ள சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் விரிவான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 250 பக்கங்கள் கொண்ட முதன்மை குற்றப்பத்திரிகையுடன், ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் என மொத்தம் 2,500க்கும் மேற்பட்ட பக்கங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. விசாரணையின் போது நடிகை ரன்யா ராவ் அளித்த வாக்குமூலத்தில், ‘எனது செல்வாக்கை பயன்படுத்தி எளிதாக தங்கம் கடத்த முடியும் என்று திட்டமிட்டோம். இதற்காக பெரும் தொகையை கமிஷனாக பெற்றுக் கொண்டேன்‘ என்று தெரிவித்துள்ளார்’ என்று கூறின.

Related Stories: