கூட்டணி மாறினாலும் கொள்கை மாறாது

கோவை, பிப். 16: தேர்தலில் கூட்டணி மாறினாலும், கொள்கை  மாறாது என கோவையில் நடந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.  தமிழக கிறிஸ்தவ ஜனநாயக கூட்டமைப்பு மாநில மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று நடந்தது.  கூட்டமைப்பு தலைவர் அந்தோணி தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில் தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது: கிறிஸ்தவ சமுதாய மக்கள், ஜெருசலம் புனித பயணம் மேற்கொள்ள ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018-19-ம் ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து 600 பேர் ஜெருசலம் புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இது, தற்போது, 1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஜெருசலம் புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது. இது, தற்போது ரூ.37 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், கிறிஸ்தவ ஆலயங்கள் புனரமைப்பு மற்றும் பழுது நீக்க ஆண்டுதோறும் ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இது, நடப்பு ஆண்டு முதல் ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் நலத்துறை மூலம் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை 38 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு ரூ.884.36 கோடி கல்வி உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மக்களிடம் மிகுந்த ஒழுக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் கல்வித்தரம் உயர்ந்து இருக்கிறது. இதற்கு, கிறிஸ்தவ பள்ளிகளின் கட்டுப்பாடு முக்கிய காரணம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா கிறிஸ்தவ கான்வென்ட் பள்ளியில்தான் படித்தார். எனது மகனும், ஏற்காட்டில் உள்ள ஒரு கிறிஸ்தவ கான்வென்ட் பள்ளியில்தான் படித்தார்.

ஒவ்வொரு தேர்தலிலும், அரசியல் கட்சிகள், மாறி மாறி கூட்டணி வைப்பது சகஜம். அதேநேரம், அ.தி.மு.க.வுக்கு தனி கொள்கை இருக்கிறது. கொள்கை வேறு, கூட்டணி வேறு என்ற நிலைப்பாட்டில் தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணி மாறினாலும், கொள்கைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கிறிஸ்தவம், முஸ்லிம், இந்து என அனைத்து மத நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளும் ஒரே கட்சி அ.தி.மு.க. நாங்கள், எப்போதும் சிறுபான்மை மக்களுக்கு துணை நிற்போம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். நிகழ்ச்சியில், தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்பட பலரும் பங்கேற்றனர்.

Related Stories: