புதுடெல்லி: விமானங்களில் ஜன்னலோரம் மற்றும் வழிப்பாதை இருக்கைகளுக்கும், கால்களை நீட்டி அமரும் வசதி கொண்ட இருக்கைகளுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில இருக்கைகள் மட்டுமே கட்டணம் இல்லாமல் கிடைக்கின்றன என்று புகார்கள் வந்தன.
இந்த நிலையில் பயணிகளின் வசதி, வெளிப்படைத்தன்மை மற்றும் விமான நிறுவனங்கள் முழுவதும் நடைமுறைகளில் சீரான தன்மையை மேலும் வலுப்படுத்த, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மூலம் அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. நியாயமான அணுகலை உறுதி செய்வதற்காக, எந்தவொரு விமானத்திலும் குறைந்தபட்சம் 60% இருக்கைகள் இலவசமாக ஒதுக்கப்பட வேண்டும். ஒரே பிஎன்ஆர்-இல் பயணிக்கும் பயணிகள் அருகருகே உள்ள இருக்கைகளில் அமர வைக்க முன்னுரிமை தரப்பட வேண்டும்.
விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இசைக்கருவிகளை எடுத்துச் செல்வதற்கு வசதி செய்து தரப்பட வேண்டும். விமான நிறுவனங்கள் செல்லப்பிராணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக தெளிவான, வெளிப்படையான கொள்கைகளையும் வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு வெளியிட்ட ஒரு பதிவில், பயணிகளுக்கான வசதி நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த முக்கிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.60 சதவீத இருக்கைகள் இலவசம். குடும்பங்களுக்கு ஒன்றாக உறுதியான இருக்கை வசதி, மேலும் விளையாட்டு உபகரணங்கள், இசைக்கருவிகள் மற்றும் செல்லப்பிராணிகளைக் கொண்டு செல்வதற்கான தெளிவான, வெளிப்படையான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
