வாக்குச்சாவடிக்கு நேரில் செல்ல முடியாத 85 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்கு செலுத்தலாம்: மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த வசதி உண்டு

சென்னை: வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க முடியாத 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்குகளை தபால் வாக்கு மூலம் செலுத்தலாம், என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், அனைத்து தகுதி பெற்ற வாக்காளர்களும் வாக்களிக்கும் வாய்ப்பை பெறுவதற்காக பல்வேறு கூடுதல் வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 40 சதவீதத்திற்கு மேல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் வீட்டில் இருந்தே சிகிச்சை பெறும் வாக்காளர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களித்து தேர்தல் அறிவிப்பு வெளியான 5 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்தல் நடத்தும் அலுவலர் விண்ணப்பம் பெற்றபின் அவர்களது தகுதியை சரிபார்த்து, தபால் வாக்குச்சீட்டை வீட்டிலேயே வழங்கி, நிரப்பிய பின் திரும்பப் பெறுவார். தபால் வாக்கு வசதியை பெறுவதற்கு படிவம் 12டி-ஐ பூர்த்தி செய்து தேர்தல் அலுவலரிடம் 5 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின், இந்த வாக்காளர்கள் வீட்டில் இருந்தவாறே வாக்களிக்க ஏதுவாக வாக்காளரின் குடியிருப்பு பகுதிக்கு வாக்குப்பதிவு அலுவலர்கள் வருகை தரும் நாள் மற்றும் நேரம் குறித்து, 12டி படிவத்தில் வாக்காளர் தெரிவித்த செல்போன் எண்ணுக்கு முன்னதாகவே குறுஞ்செய்தி அனுப்பப்படும். செல்போன் எண் குறிப்பிடாதவர்களுக்கு அஞ்சல் மூலமாக அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

குறிப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் வாக்குச்சாவடி அலுவலர் குழு வாக்காளர் வீட்டுக்குச் சென்று வாக்காளர் அடையாளத்தை சரிபார்த்து, அதை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, வாக்காளரின் கையொப்பம், கைரேகை பெற்றுக்கொண்டு வாக்களிக்கும் முறை குறித்து விளக்கி தபால் வாக்குச்சீட்டை வழங்குவர். வாக்காளர் கண்பார்வையற்று அல்லது உடல்நலிவு காரணமாக வாக்களிக்க இயலாத நிலையில் இருப்பின், அவரது சார்பில் கட்சி சார்பற்ற வயது வந்த ஒருவரை, வாக்களிப்பது குறித்து ரகசியம் காப்பு உறுதிமொழி பெற்றுக்கொண்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை மாற்றுத்திறனாளிகள்தான் என்பதற்கு அரசு சான்றிதழ் நகலை அளிக்க வேண்டும், என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related Stories: