கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கான திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் முதலமைச்சர் மம்தா பானர்ஜி. நந்திகிராம் தொகுதியில் கடந்த முறை மம்தா போட்டியிட்ட நிலையில், இம்முறை பவானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில், நந்திகிராமில் மம்தாவை தோற்கடித்த பாஜகவின் சுவேந்து அதிகாரி, இம்முறை பவானிபூரில் களம்காண்கிறார்.
2026 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலைத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். மொத்தம் உள்ள இடங்களில் 291 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ள மம்தா, மீதமுள்ள டார்ஜிலிங் மலைப்பகுதியின் காலிம்பொங், கர்சியாங் மற்றும் டார்ஜிலிங் ஆகிய 3 தொகுதிகளை அனித் தாப்பா தலைமையிலான பிஜிபிஎம் கட்சிக்காக ஒதுக்கியுள்ளார். இந்தத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 226-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் முக்கிய அம்சமாக, கடந்த 2021 தேர்தலில் தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி இந்த முறை போட்டியிடப் போவதில்லை எனத் தெரியவந்துள்ளது. அதற்குப் பதிலாக அவர் தனது பழைய கோட்டையான பவானிபூர் தொகுதியிலிருந்தே களம் காண்கிறார். 2021-ல் நந்திகிராமில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் மம்தா தோல்வியுற்றதைத் தொடர்ந்து, அங்கு இந்த முறை சுவேந்து அதிகாரியின் முன்னாள் நெருங்கிய உதவியாளரான பவித்ரா கார்கேயைத் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராகக் களமிறக்கியுள்ளது. இன்றுதான் கட்சியில் இணைந்த பவித்ரா கார்கேய், கடந்த தேர்தலில் சுவேந்து அதிகாரியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்பாளர் தேர்வில் சமூக நீதிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, 291 வேட்பாளர்களில் 52 பேர் பெண்கள், 95 பேர் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மற்றும் 47 பேர் சிறுபான்மையினர் என்று விளக்கமளித்துள்ளார்.
