பெற்றோரை இழந்ததால் திசை மாறிய 2 சிறுவர்கள் மீட்பு

குமாரபாளையம், பிப்.12: குமாரபாளையம் பெரியார் நகரை சேர்ந்த 14 மற்றும் 13 வயது சிறுவர்கள், பெற்றோரை இழந்ததால் வயதான தாத்தா, பாட்டி பராமரிப்பில் வசித்து வருகின்றனர். அங்குள்ள அரசு பள்ளியில் 9 மற்றும் 8ம் வகுப்பு படித்து வரும் இவர்களை, உறவினர்கள் சிலர் தவறான பாதைக்கு திசை திருப்பியுள்ளனர். கடந்த வாரம், அங்குள்ள செல்போன் கடைக்கு சென்ற சிறுவன், அங்குள்ள செல்போனை திருடிக் கொண்டு வந்து உறவினரிடம் கொடுத்துள்ளான். இதுகுறித்து விசாரித்த கடைக்காரர், நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சனி பிரியா உத்தரவின் பேரில், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சௌடேஸ்வரி, குமாரபாளையம் வந்து போலீசார் உதவியோடு குழந்தைகளின் தாத்தா, பாட்டியை சந்தித்து பேசினார். குழந்தைகளை அரசு பாதுகாப்பில் வைத்து கல்வி அளிக்க உறுதியளித்தனர். இதை உறவினர்கள் சிலர் ஏற்காமல், அதிகாரிகளுடன் சண்டைக்கு வந்ததோடு, சிறுவர்களை வேறு இடத்தில் மறைத்து வைத்தனர். தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியால், சிறுவர்கள் இருவரும் நேற்று மீட்கப்பட்டு, மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு அரசின் பாதுகாப்பில் உணவு, உடை, கல்வி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: