அரூர், மார்ச் 17: கம்பைநல்லூர் அருகே உள்ள கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு திட்ட குடியிருப்புகள் புதர் மண்டி காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரூர் அடுத்த கம்பைநல்லூர் அருகே உள்ள கே.ஈச்சம்பாடியில், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தென்பெண்ணையாற்றின் குறுக்கே பொதுப்பணித்துறை சார்பில் அணைக்கட்டு கட்டும் பணி தொடங்கப்பட்டது. அப்போது, அந்த பணியில் ஈடுபடுபவர்களுக்காக அலுவலகம் மற்றும் 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டது. அணைக்கட்டும் பணிகள் முடிவடைந்தவுடன், அங்கு குடியிருந்தவர்கள் காலி செய்து சென்றபின் அந்த குடியிருப்பு, அலுவலகம் ஆகியவை புதர் மண்டி காணப்படுகிறது. அப்போது பழுதடைந்து நின்ற வாகனம் துருப்பிடித்து வீணான நிலையில் காணப்படுகிறது. குடியிருப்பதற்கு வீடுகள் இன்றி மக்கள் தவித்து வரும் நிலையில், இதுபோல் பாழடைந்து காணப்படும் வீடுகளை சீரமைத்து பொதுமக்களுக்கு வாடகை அடிப்படையில் விட்டால் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
