அசாம் சட்டப்பேரவை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பாஜ முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கும் வேளையில், பறிகொடுத்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக களம் இறங்கி உள்ளது. அதற்காக அசாம் மாநில காங்கிரஸ் தலைவராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் கவுரவ் கோகாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் மகன். இவர் வந்ததும் கட்சிக்குள் களேபரங்கள் தொடங்கி விட்டன. முன்னாள் மாநில தலைவர் பூபன்போரா, 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பா.ஜ பக்கம் தாவி விட்டனர். இருப்பினும் கவுரவ் கோகாய் அனைத்து எதிர்க்கட்சிகளையும் பா.ஜவுக்கு எதிராக திரட்டி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
இது ஒருபுறம் இருக்க முதற்கட்டமாக 42 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலும் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த கட்சிகள் அதிருப்தி அடைந்து விட்டன. பேச்சுவார்த்தைகள் அப்படியே பாதியில் நிற்கிறது. குறிப்பாக ரஜோர்தளம் கட்சியுடனான பேச்சுவார்த்தை முற்றிலும் முடங்கிப்போய் விட்டது.
இதுபற்றி கவுரவ் கோகாய் கூறுகையில், ‘இப்போதைய சூழல் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை தொடரக்கூடியதாக இல்லை. அனைத்து எதிர்க்கட்சிகளையும் அசாம் பா.ஜவுக்கு எதிராக திரட்ட காங்கிரஸ் தலைவர்கள் விரும்பினார்கள். இதனால் அனைத்து கட்சிகளுடன் வளைந்து கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதிலும் தாராளமாக நடந்து கொண்டது. ஆனால் ரஜோர்தளம் உள்ளிட்ட 2 கட்சிகள் மட்டும் சாதகமான பதிலை தரவில்லை. எனவே முதற்கட்டமாக ரஜோர்தளம் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதை காங்கிரஸ் கட்சி நிறுத்தி விட்டது. இருப்பினும் இது இறுதியான முடிவு அல்ல. காங்கிரஸ் இறங்கி வந்தது போல் ரஜோர்தளம் கட்சியும் இறங்கி வந்தால் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கப்படும்’ என்றார்.
