அர்த்த ராத்திரியில் முடிவு எடுத்த ரங்கசாமி: என்ஆர்.காங்கிரசுக்கு-16, பாஜ-14: புதுச்சேரியில் முடிவுக்கு வந்தது என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு

 

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணியை உறுதி செய்வது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடான ஆலோசனை கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

இதில் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், திருமுருகன், துணை சபாநாயகர் ராஜவேலு,‌ எம்எல்ஏக்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், சந்திரபிரியங்கா, தட்சணாமூர்த்தி (எ) பாஸ்கர் மற்றும் பொதுச்செயலாளர் ஜெயபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், தே.ஜ. கூட்டணியில் ஏற்கனவே தொகுதிகள் இறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போதைய அரசியல் நிலவரம், தவெக உள்ளிட்ட புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஆனால், கட்சி நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி வேண்டாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த முறை போன்று என்ஆர்.காங்கிரசுக்கு 16, பாஜவுக்கு 14 என தொகுதிகள் பிரித்து கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. இரவு 10.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் நேற்று அதிகாலை 2 மணி வரை நடைபெற்றது. பின்னர் முதல்வர் ரங்கசாமி அளித்த பேட்டியில் விஜய்யுடன் கூட்டணி பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. மாநில அந்தஸ்து எங்களது மிக முக்கியமான கோரிக்கை. அதனை தொடர்ந்து வலியுறுத்துவோம். இதற்காக தேர்தலை புறக்கணிப்போமா? என்பதை தேர்தல் சமயத்தில் கூறுகிறோம் என்றார்.

இந்நிலையில் நேற்று, புதுச்சேரி வந்த மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சர் மன்சுவிக் மாண்டவியா, பாஜ எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தனியார் ஓட்டலில் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து, நேற்று மாலை, புதுச்சேரி காமராஜர் சாலை சாரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் என்ஆர்.காங்கிரஸ்- பாஜ கூட்டணி தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்தது.

இதில் ஒன்றிய அமைச்சர் மன்சுவிக் மண்டவியா, பாஜ மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், பாஜ மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பின் முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறுகையில், பேச்சுவார்த்தை சுமுகமாகவும், திருப்தியாகவும் இருந்தது. பாஜவுடன் கூட்டணி தொடர்கிறது. கடந்த தேர்தலை போலவே, இந்த தேர்தலிலும் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜ இணைந்து தேர்தலை சந்திக்கும். கூட்டணியில் புதிய கட்சிகள், தொகுதிகள் குறித்து பிறகு அறிவிப்போம் என்றார்.

பாஜ மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா கூறும்போது, என்.ஆர்.காங்கிரஸ் கடந்த தேர்தலில் 16 இடங்களில் போட்டியிட்டது. பாஜ தரப்பில் ஒதுக்கப்பட்ட 14 இடங்களில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்டோம். கடந்த தேர்தலில் இருந்த அதே நடைமுறை இம்முறை தொடரும். எந்த தொகுதியில், யார் போட்டியிடுவார்கள் என்பது ஓரிரு நாட்களில் இறுதி செய்து விடுவோம் என்றார்.

* அதிமுகவுக்கு சீட் ஒதுக்கவில்லை

புதுச்சேரியில் கடந்த முறை என்டிஏ கூட்டணியில் இடம்பெற்ற அதிமுகவுக்கு பாஜ பெற்ற 14 தொகுதிகளில் இருந்து உள்ஒதுக்கீடாக 5 தொகுதிகள் வழங்கப்பட்டன. பாமகவுக்கு தொகுதிகள் ஒதுக்கவில்லை. இதேபோல், இந்த முறையும் கூட்டணியில் இடம் பிடித்து உள்ள அதிமுகவுக்கு நாங்களே சீட் கொடுக்கிறோம் என கூறி அதே 14 தொகுதிகளை பாஜ பெற்று உள்ளது. இந்த முறை அதிமுகவுக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும், 2 தொகுதிகள் லாட்டரி அதிபர் மகன் ஜோஸ் சார்லஸ் தொடங்கி லட்சிய ஜனநாயக கட்சிக்கு வழங்கப்பட உள்ளன. இந்த முறையும் பாமகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாது என கூறப்படுகிறது. இதனால், பாஜ 10 தொகுதிகளில் போட்டியிடும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பாஜ மேலிடம் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா கூறுகையில், ‘புதுச்சேரியில் அதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் பேசவில்லை. கடந்த முறை 4 எம்எல்ஏக்கள் இருந்ததால் 5 இடங்கள் ஒதுக்கினோம். இம்முறை பேசி முடிவு எடுப்போம். பாஜ கூட்டணியில் லஜக, அதிமுகவுக்கு சீட் ஒதுக்குவோம்’ என்றார்.

Related Stories: