வலை வீசும் பாஜ தலைதெறிக்க ஓடும் பிரபலங்கள்

 

கேரளாவில் மொத்தம் 140 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் 90 தொகுதிகளில் போட்டியிட பாஜ தீர்மானித்துள்ளது. ஆனால் பல தொகுதிகளுக்கு இதுவரை போட்டியிட ஆள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணியில் சினிமா, டிவி நட்சத்திரங்கள், எழுத்தாளர்கள் உள்பட பிரபலங்கள் போட்டியிடுகின்றனர்.

எனவே தங்களது கூட்டணியில் சினிமா நட்சத்திரங்கள் உள்பட குறைந்தது 20 பிரபலங்களையாவது போட்டியிட வைக்க வேண்டும் என்று பாஜ தீர்மானித்துள்ளது. இதற்கான பொறுப்பு தேசிய ஜனநாயக கூட்டணி கேரள மாநில ஒருங்கிணைப்பாளரான ஏ.என். ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை குறிப்பிட்டு சொல்லும்படி எந்த பிரபலமும் இவர்களது வலையில் சிக்கவில்லை. சில சமயங்களில் பாஜவுக்கு ஆதரவாக பேசும் ஒரு சில சினிமா பிரபலங்கள் கூட போட்டியிட விருப்பமில்லை என்று கூறி வாய்ப்பை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

மலையாள சினிமா பாடகர்கள், பாடகிகள் உள்பட பிரபலங்களை அணுகி தேர்தலில் சீட் தருவதாக கூறியும் யாரும் மசியவில்லை. சங் பரிவார் அமைப்பின் ஆதரவாளரான ஒரு முன்னணி மலையாள இளம் நடிகரை பாஜ குழு சந்தித்து, வரும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தியது. ஆனால் தனக்கு வேறு நிறைய வேலை இருப்பதாக கூறி நைசாக அவர் எஸ்கேப் ஆகிவிட்டார்.

பாஜவின் தீவிர ஆதரவாளரான இவர் எப்படியாவது தேர்தலில் போட்டியிடுவார் என்று நம்பிக்கையில்தான் அவரை சந்திக்க இக்கட்சியின் ஆள் பிடிக்கும் குழு சென்றது. ஆனால் அவரும் போட்டியிட மறுத்தது பாஜ தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட மற்ற கட்சிகளில் உள்ள பிரபலங்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கு பாஜ திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

Related Stories: