கை வலிக்க தட்டியும் கூட்டணி கதவுகள் திறப்பாரில்லை: ராமதாஸ் தேர்தல் புறக்கணிப்பு?

தமிழகத்தில் திமுக, அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன. தவெக தனித்து போட்டியிடுவதாக அறிவித்து விட்டது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணி தலைமையிலான பாமக அணிக்கு ராஜ்ய சபா சீட் கொடுக்கப்பட்ட நிலையில், அக்கட்சி 17 தொகுதிகளை கூட்டணி தலைமையிடம் கேட்டு வருகிறது. ஆனால் நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான அணி, கூட்டணியை உறுதிசெய்யாத நிலையில் நேற்று முன்தினம் தைலாபுரம் வந்த சசிகலா ராமதாசை சந்தித்து பேசினார்.

தவெகவுடன் இணைந்து தனி அணியாக பயணிப்பது குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது அந்த கதவும் மூடப்பட்டது. இதனால் அடுத்தகட்ட நகர்வு குறித்து ராமதாஸ் தனது ஆதரவு மூத்த நிர்வாகிகளிடம் பேசி வருகிறாராம். ஏற்கனவே அய்யா பாமக எனும் கட்சியை பதிவு செய்வது தொடர்பான ஒரு மனுவை டெல்லி நீதிமன்றத்தில், நடைபெற்ற வழக்கில் சேர்த்து ராமதாஸ் தீவிர ஆதரவாளர் ஒருவர் அளித்திருந்த நிலையில், தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது. இதனிடையே சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து தள்ளி வைக்கப்படும் இவ்வழக்கில் தேர்தலுக்கு பிறகே இறுதிகட்ட தீர்வு கிடைக்கும் சூழல் உருவாகி இருப்பதால் ராமதாசின் அரசியல் தொடர் பயணத்துக்கே மிகுந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாம்பழம் சின்னம் தற்போதைக்கு கிடைக்காது என்பதால் புதிய சின்னத்தில்தான் தனது ஆதரவு நிர்வாகிகளை கிட்டத்தட்ட சுயேச்சைகளாக களமிறக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்ட ராமதாஸ், தனது அரசியல் கவுரவத்தை நிலை நாட்டவும், அதேவேளையில் தனியாக போட்டியிட்டு டெபாசிட்கூட வாங்க முடியாமல் தனது மகன் செய்த அதே தவறை தான் செய்யாமல் இருப்பதற்கும், அவர் முன்பாக இருக்கும் ஒரே வழி தேர்தல் புறக்கணிப்பு நிலைப்பாடுதான் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற சூழலால் கட்சி எனும் நிலைப்பாட்டில் ேதர்தல் புறக்கணிப்பு முடிவை அவர் மேற்கொண்டாலும், தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்பதை வாக்குபதிவுக்கு சில தினங்களுக்கு முன்பு அறிவித்து தனது அரசியல் துரோகிகளுக்கு பாடம் கற்பிக்கும் நிலைப்பாட்டை எடுப்பது குறித்தும் தனக்கு நெருக்கமான மூத்த நிர்வாகிகள், உறவினர்களிடம் ராமதாஸ் தொடர்ந்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாகவே நேற்றைய (வியாழன்) செய்தியாளர்கள் சந்திப்பையும் அவர் தவிர்த்து விட்டாராம்.

Related Stories: