சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 15ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்ற நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்தநிலையில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 15ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இந்த கூட்டம் காலை 10.30 மணியளவில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இந்த கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதி நிலையை எட்டியுள்ளன. மீதமுள்ள கட்சிகளுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகின்றது.
இந்த கூட்டத்தில், தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக பூத் கமிட்டி பணிகள் அமைகின்றன. அதன்படி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கட்சி வலுவாக இருப்பதை உறுதி செய்ய மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் உத்தரவுகளைப் பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், கடந்த ஐந்தாண்டு கால சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான உத்திகள் வகுக்கப்படும் என தெரிகிறது. குறிப்பாக ‘மக்கள் பணியில் மகத்தான 5 ஆண்டுகள்’ என்ற முழக்கத்துடன், அரசின் நலத்திட்டங்களான மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம் போன்றவை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றடைவதை உறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்படும்.
200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ள நிலையில், இதற்காக கனிமொழி எம்.பி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் பணிகள் மற்றும் மாவட்ட வாரியான கள நிலவரங்களை இக்கூட்டத்தில் முதல்வர் கேட்டறிய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
