பெரம்பலூர்: பெரம்பலூரில் நடந்த திமுக சார்பு அணி நிர்வாகிகள் கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து பேசியதாவது: இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத, நினைத்துக்கூட பார்க்க முடியாத பல்வேறு சாதனை திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி உள்ளார். அதனாலேயே இந்திய அளவில் நம்பர் ஒன் முதல்வர் என பெயர் எடுத்துள்ளார். பல லட்சம் கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளார்.
ஒவ்வொரு குடும்பத்திலும் தமிழக முதல்வர் செயல்படுத்தியுள்ள திட்டங்களில் பயன்பெற்ற பயனாளி ஒருவராவது இருப்பார். எனவே ஒவ்வொரு குடும்பத்தையும் நேரில் சந்தித்து திராவிட மாடல் ஆட்சியின் சாதனை திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரியுங்கள். ஒரு சிலர் எதற்கெடுத்தாலும் திமுக சதி என பேசி வருகின்றனர். அதனை நாம் பொருட்படுத்தாமல் கட்சியின் வெற்றிக்காக களப்பணியாற்ற வேண்டும். விடியல் பயண திட்டத்தின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 920 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். இன்று பல்வேறு மாநிலங்கள் இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்தியுள்ளன. மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு கடந்த 5 ஆண்டுகளில் 1.40 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டு அவர்களது திறன் மேம்படுத்தப்படடு உள்ளது.
அந்த தொகையை கொண்டு அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான மூலப் பொருட்கள் சலுகை விலையில் பெறவும், உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக 25 கிலோ வரையிலான பொருட்களை அரசு பேருந்துகளில் 100 கிமீ வரை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம். இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஒரு திட்டம், ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’. இந்த திட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று சிலர் திட்டம் தீட்டினார்கள்.
இந்த சூழ்ச்சிகளை தமிழக முதலமைச்சர் வெற்றிகரமாக முறியடித்து, ஒரு கோடியே 32 லட்சம் மகளிரின் வங்கி கணக்குகளில் 5,000 ரூபாயை வழங்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், மீண்டும் அமையப்போகும் 2.0 ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தித் தருவோம் என்ற வாக்குறுதியையும் கொடுத்துள்ளார். தமிழகத்தில் கொண்டு வந்த காலை உணவு திட்டத்தை இலங்கை, கனடா போன்ற வெளிநாடுகளும் பாராட்டியுள்ளது. இப்படி திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதன் மூலம் இந்திய அளவில் 11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சி பெற்று முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
