2 ஆயிரம் பதிவு செய்தால் 4 ஆயிரம் கூடுதல் பணமழை பொழிந்த ஏ.டி.எம். மெஷின்

பெ.நா.பாளையம்,பிப்.11:  கோவை அருகே பதிவு செய்ததைபோல இருமடங்கு பணத்தை அளித்த ஏ.டி.எம். மெஷினால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை-தடாகம் சாலை கே.என்.ஜி. புதூரில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை இதில் ஊர்க்காவல் படையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி 2 ஆயிரம் ரூபாய் எடுக்க முயன்றார். ஆனால் மெஷினில் இருந்து ரூ.4200 வந்துள்ளது. ஆச்சரியம் அடைந்த அவர் மீண்டும் தனது கார்டை பயன்படுத்தி 3 ஆயிரம் ரூபாய் எடுக்க முயன்றார். அப்போது மெஷினில் இருந்து ரூ.7200 வந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த புகார் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அந்த ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க வந்த பொதுமக்களிடம் பிரச்னையை கூறி பணம் எடுக்க வேண்டாம் என தடுத்துள்ளார். சம்பவ இடம் வந்த வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். மெஷினில் ஏற்பட்டிருந்த கோளாறினை சரி செய்தனர்.  அதன்பின் பொதுமக்களை பணம் எடுக்க அனுமதித்தனர். உடனடியாக செயல்பட்டு வங்கிக்கு ஏற்பட இருந்த இழப்பை தடுத்த செய்தில்குமாரை அதிகாரிகள் பாராட்டினர். நேற்று முன்தினம் ஏ.டி.எம். மூலம் கூடுதலாக பணம் எடுத்த வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தி கூடுதலாக அவர்கள் பெற்ற பணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: