ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இடிக்க எதிர்ப்பு தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

மொடக்குறிச்சி, பிப். 11:  மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தின் அவசர கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் ஒன்றியக்குழு தலைவர் கணபதி தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் சுசீலா முன்னிலை வகித்தார். இந்த அவசர கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 7 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகமாக இயங்கி வரும் கட்டிடத்தை காலி செய்து தற்காலிகமாக புதிய கட்டிடம் கட்டும் வரை மொடக்குறிச்சி சந்தைப்பேட்டையில் உள்ள வட்டார சேவை மைய கட்டிடத்தில் அலுவலகம் இயங்கி கொள்வதற்கு மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற மன்றத்தின் அங்கீகாரம் வேண்டும் என மன்ற பொருள் வைக்கப்பட்டது.

  இந்த மன்ற பொருளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க. கவுன்சிலர்கள் கிருஷ்ணவேணி, கலைச்செல்வி, உமாமகேஸ்வரி, விமலாதேவி, சண்முகம், கௌசல்யாதேவி, புனிதவதி ஆகிய 7 கவுன்சிலர்கள் ஒன்றியக்குழு தலைவர் கணபதியிடம் மனு அளித்தனர். அம்மனுவில், புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஆட்சேபனை இல்லை பழைய கட்டிடம் நல்ல நிலையில் இருக்கும்போது, அதனை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டியதில்லை. தற்போது காலியாக உள்ள இடத்திலேயே புதிய கட்டிடம் கட்டிக் கொள்ளலாம். எனவே, பழைய கட்டிடத்தை இடிப்பதற்கு எங்களுக்கு உடன்பாடு இல்லை. நாங்கள் கொண்டுவரும் தீர்மானத்தை நிறைவேற்றி அதனை ஏற்று தீர்மான புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும். தற்போது செயல்படும் கட்டிடத்திலேயே அலுவலகம் செயல்பட வேண்டும். மேலும் இடத்தை காலி செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மன்ற பொருளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்திடாமல் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: