கருங்கல் அருகே பைக் மீது ஆட்டோ மோதி கார் விற்பனை பிரதிநிதி பலி

கருங்கல், மார்ச் 11: கருங்கல் அருகே பைக் மீது ஆட்டோ மோதியது. இதில் கார் விற்பனையாளர் பரிதாபமாக இறந்தார். கருங்கல் அருகே வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் விபின்ராஜ் (29). அந்த பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பழைய கார் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து வீட்டிற்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது நண்பர் ஒருவரை அவரது வீட்டில் விடுவதற்காக கருங்கல்- தக்கலை சாலையில் செல்லங்கோணத்திற்கு சென்றுள்ளார்.

பின்னர் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். செம்மண்குளம் அருகே வந்தபோது, கருங்கலில் இருந்து செல்லங்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோ பைக் மீது வேகமாக மோதியது. இதில் விபின்ராஜ் தூக்கி வீசப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் ஆட்டோ கவிழ்ந்ததில் கப்பியறை பகுதியை சேர்ந்த டிரைவர் படுகாயமடைந்தார். இந்த தகவல் அறிந்ததும் கருங்கல் ேபாலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் விபின்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: