திருக்கோவிலூர், மார்ச் 11: உளுந்தூர்பேட்டை அடுத்த அயன்வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகள் ஷர்மிளா(20), இவர் விழுப்புரத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் ஷர்மிளா திருக்கோவிலூர் அடுத்த ஆற்காடு கிராமத்தில் உள்ள கோயிலுக்கு பொங்கல் வைக்க குடும்பத்துடன் வந்துள்ளனர். அப்போது அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் குடும்பத்தினருடன் சென்று குளிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக ஷர்மிளா நீரில் மூழ்கியுள்ளார். இதைகண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு முகையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது ஷர்மிளாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் ஷர்மிளாவின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது தந்தை முருகன் அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
