குமரியில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்த கட்டுப்பாடு எஸ்.பி. எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. ஏற்கனவே 12ம் வகுப்பு தேர்வுகள் நடந்து வருகின்றன. மாணவ, மாணவிகளின் நலன் கருதி இரவு நேரங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க பொதுமக்களுக்கு எஸ்.பி. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : 12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப் பொதுத்தேர்வுகள் நடைபெறுவதையொட்டி மாணவர்கள் அமைதியான முறையில் தேர்வுக்குத் தயாராவதற்கு ஏதுவான சூழலை உருவாக்குவது நம் அனைவரின் கடமையாகும். எனவே மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு, குமரி மாவட்ட காவல்துறை பின்வரும் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பொது இடங்களில் எந்த விதமான ஒலிபெருக்கிகள் அல்லது அதிக சத்தம் எழுப்பும் இசைக்கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது.

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அனைத்து மதம் சார்ந்த விழாக்கள், அரசியல் கூட்டங்கள், திருமண நிகழ்ச்சிகள் அல்லது தனியார் இல்ல விழாக்களில் நிர்ணயிக்கப்பட்ட 55 டெசிபல் ஒலி அளவைத் தாண்டி சத்தம் எழுப்பக் கூடாது. குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கிப் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இந்த விதிகளை மீறி, மாணவர்களின் படிப்பிற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களின் ஒலிபெருக்கிகள் பறிமுதல் செய்யப்படும். பொதுமக்கள் மற்றும் விழா அமைப்பாளர்கள் இந்த தேர்வு காலத்தில் சமூக அக்கறையுடன் மாணவர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இது குறித்து புகார்களை 7708239100 மற்றும் 8122223319 (வாட்ஸ் அப்) என்ற செல்போன் எண்களுக்கு தெரிவிக்கலாம்.
இவ்வாறு கூறி உள்ளார்.

Related Stories: