ஊட்டி : மே தினம் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. எனினும், வழக்கத்தை காட்டிலும் இந்த ஆண்டு சற்று கூட்டம் குறைந்தே காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
குறிப்பாக, வார விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவதை தற்போது வாடிக்கையாக கொண்டுள்ளனர்.தற்போது கோடை சீசன் என்பதால், கடந்த ஒரு மாதமாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று அதிகரித்துள்ளது.
மே 1ம் தேதி தொழிலாளர்கள் தினத்தையொட்டி விடுமுறை கிடைத்த நிலையில், வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் நேற்று ஊட்டியை முற்றுகையிட்டனர். தொட்டபொட்டா, பைக்காரா, தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா செல்லும் சாலைகளிலும் வாகனங்கள் அதிகம் காணப்பட்டன. மேலும், அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஊட்டி ஏரியில் வெகு நேரம் காத்திருந்தே சுற்றுலா பயணிகள் நேற்று படகு சவாரி மேற்கொள்ள முடிந்தது. நேற்று அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்த நிலையில், பெரும்பாலான ஓட்டல்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அதேசமயம், இ-பாஸ் நடைமுறையில் உள்ள நிலையில், கடந்த ஆண்டுகளில் மே தினத்தன்று ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை காட்டிலும், இந்த ஆண்டு கூட்டம் குறைந்தே காணப்பட்டது.
பொதுவாக மே தினத்தன்று திருப்பூர், கோவை போன்ற சமவெளிப் பகுதிகளில் உள்ள தொழிற் நிறுவனங்களுக்கு விடுமுறை என்பதால், ஏராளமான இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் ஊட்டியை முற்றுகையிடுவார்கள். ஆனால், இந்த ஆண்டு தொழிலாளர்கள் வருகையும் குறைந்தே காணப்பட்டது.
அதேசமயம், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளே அனைத்து சுற்றுலா தலங்களிலும் அதிகம் காணப்பட்டனர்.
இ-பாஸ் நடைமுறையில் உள்ள காரணத்தினாலேயே கடந்த இரு ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
