மூதாட்டியை தாக்கிய வடமாநில வாலிபர்

ஏற்காடு, மார்ச் 10: ஏற்காடு அருகே வீடு புகுந்து மூதாட்டியை தாக்கிய வடமாநில வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம் ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் நேற்று வடமாநில வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்தார். அப்போது, திடீரென ஒரு வீட்டுக்குள் புகுந்த அந்த வாலிபர், அங்கு தனியாக இருந்த மூதாட்டியை தாக்கியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மூதாட்டி கூச்சலிடவே அக்கம்-பக்கத்தினர் ஓடிவந்தனர். வடமாநில வாலிபர் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க வந்ததாக சந்தேகமடைந்த பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து, ஏற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று வாலிபரை மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த புரூஸ்வா(42) என்பது தெரியவந்தது. அவர் கொள்ளையடிக்கும் நோக்கில் அங்கு சுற்றித்திரிந்தாரா? எதற்காக மூதாட்டியை தாக்கினார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொண்டதால், போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Related Stories: