மாநிலங்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு!!

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் தம்பிதுரை (அதிமுக), ஜி.கே.வாசன் (தமாகா) மற்றும் திமுகவை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி.செல்வராசு ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 26ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 5ம் தேதி (நேற்று) கடைசி நாளாகும். வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 9ம் தேதி கடைசி நாளாகும். மார்ச் 16ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

தற்போது தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்களின் அடிப்படையில் திமுக 4 எம்.பிக்களையும், அதிமுக 2 எம்.பிக்களையும் தேர்வு செய்ய முடியும். அதன்படி தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு திருச்சி சிவா (திமுக), கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (திமுக), கிறிஸ்டோபர் திலக் (காங்கிரஸ்), எல்.கே.சுதீஷ் (தேமுதிக), தம்பிதுரை (அதிமுக), அன்புமணி (பாமக) ஆகிய 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இவர்கள் 6 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டு, மற்ற வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட 6 பேரும் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Related Stories: