மடப்புரம் காவளாளி அஜித்குமார் மீது நிகிதா என்பவர் அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைத்தது சிபிஐ!!

சென்னை: மடப்புரம் காவளாளி அஜித்குமார் மீது நிகிதா என்பவர் அளித்த நகை திருட்டு புகாரை சிபிஐ முடித்து வைத்தது. நகைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் நிகிதாவின் சம்மதத்துடன் வழக்கை முடித்து வைப்பதாக நீதிமன்றத்தில் சிபிஐ கூறியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் மீது கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி நிகிதா என்பவர் நகை திருட்டு புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் காவலாளி அஜித்குமாரை அழைத்து வந்து தனிப்படை காவலர்கள் விசாரணை நடத்தினர். மேலும், போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்.

இச்சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காவல் மரண வழக்கு பதிவு செய்த சிபிஐ, வழக்கில் சம்பந்தப்பட்ட தனிப்படை காவலர்களை கைது செய்தனர். மேலும், சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப் பத்திரிக்கையில் அஜித்குமார் கொலை சம்பவத்தன்று பணியில் இருந்த மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முக சுந்தரம் மற்றும் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளைய ராஜா ஆகிய 4 பேரின் பெயர்கள் சேர்க்கபட்டது.

தொடர்ந்து, இந்த வழக்கில் நகை திருட்டு புகார் அளித்த நிகிதாவை விசாரிக்க சிபிஐ தரப்பில் மதுரை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, நீதிமன்றத்தில் ஆஜரான நிகிதாவிடம், நகை திருட்டு புகாரை சிபிஐ முடிக்க முடிவு செய்திருப்பது குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு நிகிதா எதிர் கருத்து தெரிவிக்கவில்லை. அது தொடர்பாக எழுத்து பூர்வமாக மனு தாக்கல் செய்ய நிகிதாவுக்கு உத்தரவிடபட்டது.

இந்த வழக்கு மதுரை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிகிதா நேரில் ஆஜராகி எழுத்து பூர்வ மனு தாக்கல் செய்தார். திருடு போனதாக கூறப்படும் நகைகளை கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே நகை திருட்டு வழக்கை முடித்து வைக்கிறோம் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: