திருச்சி பஞ்சப்பூரில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் வரும் 11ம் தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். பொதுக்கூட்ட முன்னேற்பாடு பணிகளை ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: திருச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் 7 லட்சம் பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ெபாதுக்கூட்டம் தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜனாதிபதியை வரவேற்க செல்லாதது கண்டனத்திற்குரியது.
ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேற்கு வங்க அரசு முழுமையாக செய்யவில்லை. இலவசங்கள் கிடையாது என்று விஜய் கூறியிருந்தார். தற்போது அவரே இலவசங்களை அறிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட்டு அவர் தன்னை இன்னும் நிரூபிக்கவில்லை. அவர் சந்திக்கும் முதல் தேர்தல். அவர் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார், எந்த அளவுக்கு வாக்குகளை வாங்குவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கூட்டத்தை வைத்து எந்த முடிவும் செய்து விட முடியாது. சினிமா நடிகரை பார்க்க வரும் கூட்டம் என்பது வேறு.
அரசியல் நோக்கத்தோடு தலைவர்களை பார்க்க வரும் கூட்டம் என்பது வேறு. நடிகர்களை பார்க்க விரும்புபவர்கள் ஓட்டு போடுவார்களா என்று தெரியாது. தமிழ்நாட்டில் எம்ஜிஆர் காலத்தோடு அது முடிந்து விட்டது. ஆளுநர் மாற்றம் என்பது வழக்கமாக செய்யும் ஒன்று தான். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. சர்வதேச போர் சூழல் காரணமாக காஸ் விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
