வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்..!!

சென்னை: ஈரான் – அமெரிக்க போர் சூழல் நிலவும் நிலையில், நள்ளிரவில் நாடு முழுவதும் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்து ரூ.868.50ல் இருந்து ரூ.928.50ஆக விற்பனை செய்யப்படுகிறது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.114.50 உயர்ந்து ரூ.2043.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என ஒன்றிய அரசு கூறிவந்த நிலையில், போர் சூழலை பயன்படுத்தி விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

*காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே: போர் தொடங்கியபோது எந்த பிரச்சனையும் இந்தியாவுக்கு இல்லை என்று மோடி அரசு கூறியது . தற்போது இந்திய மக்களுக்கு தேவையான பெட்ரோலிய பொருட்கள், கேஸ், உரம் வழங்க முடியாமல் தடுமாறுகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோது அதன் பலன்கள் மக்களுக்கு செல்லாமல் பறிக்கப்பட்டது. இப்போது மக்களின் வியர்வை, விலைவாசி உயர்வு சுமையால் உறிஞ்சப்படுகிறது என கூறியுள்ளார்.

*பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மக்களை பாதிக்கக்கூடிய சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

* சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்: ஆட்சியில் இருந்து பாஜக இறங்கினால்தான் விலைவாசி குறையும் என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். சமையல் கேஸ் சிலிண்டர் விலையை ஒன்றிய பாஜக அரசு உயர்த்தியது வெட்கக்கேடானது. போரால் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என கூறிய சில நாட்களில் கேஸ் விலையை பாஜக அரசு உயர்த்தியுள்ளது.

*காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். சிலிண்டர் விலையை உயர்த்திய ஒன்றிய அரசின் முடிவு பொதுமக்கள் மீது மேலும் பொருளாதார சுமையை ஏற்படுத்தும் என கூறினார்.

*மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: சிலிண்டர் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. இப்போது 21 நாட்களுக்கு முன்பே சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டும் என ஏன் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இடையில் சிலிண்டர் தீர்ந்து போனால் வீட்டிற்கு நேரடியாக உணவு டெலிவரி செய்வீர்களா? மண்ணெண்ணெய் ஒதுக்கீடு கூட குறைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒவ்வொரு நாளும் பொருட்களின் விலைகளை உயர்த்துகிறீர்கள். இந்த உயர்வுகளுக்குப் பின்னால் உள்ள நோக்கம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: