அரியப்பாக்கம் பகுதியில் புதர் மண்டிய பயணியர் நிழற்குடை: சீரமைக்க வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: அரியப்பாக்கம் பகுதியில், பயணியர் நிழற்குடை முன்பு மண்டிக்கிடக்கும் புதர்களை அகற்ற வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே, எல்லாபுரம் ஒன்றியத்தில், ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் அரியப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு, அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

இவர்கள் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலை மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதற்கு சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரியப்பாக்கம் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று அங்கிருந்து பேருந்து ஏரி செல்வார்கள். அவ்வாறு அவர்கள் செல்வதற்கு நீண்ட நேரம் வெயிலிலும், மழையிலும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனால், அப்பகுதி மக்கள் அரியப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைத்துத்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதன்படி, கடந்த 2023-2024ம் ஆண்டு பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சி விட்டனர். அதன்பிறகு, பேருந்து நிறுத்தத்தில் நின்று தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு அப்பகுதி மக்கள் சென்று வந்தனர். இந்நிலையில், அந்த பேருந்து நிறுத்தம் முன்பு தற்போது புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இதனால், பேருந்து ஏற வரும் பயணிகள் நிறுத்தம் முன்பு உள்ள புதர்களை கண்டு பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தீண்டி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே, அரியப்பாக்கம் பேருந்து நிறுத்தம் முன்பு உள்ள புதர்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Related Stories: