சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
அந்த வகையில், இன்று சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.990 உயர்ந்துள்ளது. வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.2,246.50இல் இருந்து ரூ.3,237ஆக உயர்ந்துள்ளது.
மார்ச் மாதம் ஒன்றாம் தேதி வணிக சிலிண்டர் விலை உயர்ந்த நிலையில் மீண்டும் மார்ச் 7இல் உயர்ந்தது. மீண்டும் ஏப்.1இல் வணிக சிலிண்டர் விலை உயர்ந்த நிலையில் தற்போது மாத தொடக்கத்திலேயே உயர்ந்துள்ளது.
வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை மாற்றம் இன்றி ரூ.928.50ஆக தொடர்கிறது. அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாட்டால் வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.
ஏற்கனவே போர் காரணமாக ஏற்பட்டுள்ள சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சனையால் பல ஹோட்டல்கள் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் தற்போது சிலிண்டர் விலை உயர்ந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
