கோவிந்தா… கோவிந்தா… கோஷம் விண்ணதிர.. பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று, வைகையாற்றில் பச்சை பட்டு உடுத்தி அழகர் இறங்கினார். மதுரை சித்திரை திருவிழாவின் மகுடம் சூடும் நிகழ்வான, சித்ரா பவுர்ணமியன்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்வுக்காக அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக அழகர்கோவில் மலையில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6.15 மணிக்கு அழகர் மதுரையை நோக்கி புறப்பட்டார். கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில் வாசலில் சிறப்பு பூஜைக்கு பின், அங்கிருந்து புறப்பட்டு, பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தர்ராஜன்பட்டி, கடச்சனேந்தல் வழியாக இரவு முழுவதும் பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

நேற்று அதிகாலை மூன்றுமாவடிக்கு வந்த அழகரை, மதுரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு அழைத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து புதூர், ரிசர்வ்லைன், தல்லாகுளம் பகுதிகளில் எதிர்சேவை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு வந்தார். அங்கிருந்து நேற்றிரவு 11.30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இன்று (மே 1) அதிகாலை 2.30 மணியளவில் வழியில் உள்ள தல்லாகுளம் கருப்பணசுவாமி கோயில் அருகே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி வைகை ஆற்றை நோக்கி பயணித்தார். அதிகாலை 5.35 மணி முதல் 6.05 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்கினார்.

அவரை மதுரை தெற்குமாசி வீதி வீரராகவப்பெருமாள் வரவேற்றார். பல லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசித்தனர். இதற்கென மதுரை சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் துவங்கி வெளிநாட்டினரும் மதுரை வந்தனர். வைகை ஆற்றில் இருந்து புறப்படும் அழகருக்கு இன்று பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டகப்படியில் பக்தர்களின் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்பு வழி நெடுக பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளும் அழகர் இரவு வண்டியூர் பெருமாள் கோயிலை சென்றடைகிறார். அழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: