ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க அமெரிக்காவிடம் ஒன்றிய அரசு அனுமதி கேட்டு கெஞ்சுகிறது: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க அமெரிக்காவிடம் ஒன்றிய அரசு அனுமதி கேட்டு கெஞ்சுவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிக்கை: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது சர்வதேச சட்டங்களுக்கு புறம்பாக ராணுவத் தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் காரணமாக, எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேற்காசிய நாடுகளிலிருந்து எண்ணெய் கப்பல்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்வது ஆபத்தானதாக மாறிவிட்டது.

ஈரான் ஹர்முஸ் நீரிணையையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதால் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. எந்த நாட்டிலிருந்து எந்தப் பொருளை இறக்குமதி செய்ய வேண்டும் என முடிவு செய்யும் உரிமை நமது நாட்டின் முழு உரிமையாகும். அந்த உரிமையை அமெரிக்காவிடம் மோடி அரசு இழந்து நிற்பது நமது நாட்டின் இறையாண்மைக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

நமது சுதந்திரத்தையும், சுயமரியாதையும் பாதிக்கும் வகையிலும், நமது சுதந்திரமான ஏற்றுமதி – இறக்குமதி கொள்கையையும், வெளியுறவு கொள்கையை அமெரிக்காவிடம் மோடி அரசு அடகு வைத்துவிட்டதும் நமது நாட்டின் நலன்களுக்கு எதிரானது. ரஷ்யா இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு. நெருக்கடிகள் ஏற்படும் பொழுதெல்லாம், உற்ற நண்பனாய் உதவிக் கரம் நீட்டும் நாடு. ஏற்கனவே மலிவு விலையில் நமக்கு எண்ணெய் வழங்கி வந்தது.

அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்து அந்நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை மோடி அரசு நிறுத்தியது. தற்பொழுது அந்நாட்டிடம் இருந்து மீண்டும் இறக்குமதி செய்ய அமெரிக்காவின் அனுமதிக்கு மோடி அரசு கெஞ்சுகிறது. இந்தியாவை அமெரிக்காவின் அடிமைபோல் மோடி அரசு மாற்றுகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. மோடி அரசு, உடனடியாக இத்தகையப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: