பொன்னி சித்திரக் கடல்!

நன்றி குங்குமம் தோழி

கலை என்பது ஒரு தனி மனிதனின் கற்பனைத்திறன், படைப்பாற்றல் மற்றும் உணர்வுபூர்வமான இணைப்பை ஏற்படுத்தும் வெளிப்பாடு என்பதையும் தாண்டி, கலை சமூகத்தை ஒன்றிணைக்கக்கூடியது எனலாம். ஓர் கூரையின் கீழ் அமர்ந்து ஓவியக் கலையை கற்பதும், அதை வெளிப்படுத்துவதும், சினிமாவை குறித்த ஆழமான கருத்துக்களை பகிர்ந்து கொள்வதும், சமூகம் அறியப்படவேண்டிய விஷயங்களை குழுவாக ஆலோசிப்பதும் போன்ற நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் நாகை மக்களிடையே கலையை வளர்த்து, ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுத்தி வருகிறது நாகப்பட்டினம், நீலா தெற்கு வீதியில் இயங்கி வரும் ‘பொன்னி சித்திரக் கடல்.’

இந்த கலைக்கூடம் நாகப்பட்டினம் மாவட்ட அளவிலான ‘மாவட்ட கல்வி தன்முனைப்பு திட்டம்’ (District Educational Empowerment Programme – DEEP) மூலம் செயல்பட்டு வருகிறது. மாணவர்களிடையே கல்வி தரம் மற்றும் கலை ஆர்வத்தை வளர்ப்பதில் இத்திட்டம் முக்கிய பங்காற்றுகிறது. DEEP திட்டத்தின் நீட்சியாக செயல்பட்டு வரும் ‘பொன்னி சித்திரக் கடல்’ எனும் கலைக்கூடத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆதி. உதயகுமார் இதுகுறித்து விளக்குகிறார்.

“அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு மற்றும் வளாக கல்வி மட்டுமின்றி இலக்கியம், விளையாட்டு, கலை போன்றவற்றிலும் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில், மாவட்ட கல்வி தன்முனைப்பு திட்டத்தின் கீழ் செஸ், பேட்மிண்டன் போன்ற பயிற்சிகளை வழங்கினோம். இதையடுத்து ஓவியக்கலை பயிற்சி வழங்குவதற்காக ஒரு அகாடமி துவங்கலாம் என்கிற யோசனையில் 2023ம் ஆண்டில் நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜானி டாம் வர்கீஸ் அவர்கள் நாகை ஆர்ட் அகாடமி எனும் கலைக்கூடத்தை துவங்கினார்.

நாகப்பட்டினத்தில் நீலா தெற்கு வீதியில் அமைந்துள்ள ஒரு நூற்றாண்டு பழமையான கட்டிடம் ஒன்றை தேர்ந்தெடுத்து, புதுப்பித்து அதனை கலைக்கூடமாக மாற்றி அங்கு மாணவர்களுக்கான ஓவியப் பயிற்சி வழங்க திட்டமிட்டோம். 13 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கும், கோடை விடுமுறை காலங்களில் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கென்று குறுகிய கால ஓவியப் பயிற்சிகளையும் வழங்கினோம். இக்கலைக்கூடம் நாகை மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் பொது மக்களையும் இதில் இணைத்தோம்.

ஆறுமாத கால ஓவியப்பயிற்சிக்கு நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆறுமாதமும் மாணவர் சேர்க்கை நடைபெறும். இதுவரை இரண்டு பேட்ச் மாணவர்கள் ஓவியக்கலையில் பயிற்சி பெற்று மேம்பட்டுள்ளனர். இப்போது மூன்றாவது பேட்ச் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். எட்டாம் வகுப்பு முதல் கல்லூரி படிக்கும் மாணவர்களும், பொதுமக்கள் சிலரும் பயிற்சியில் இருப்பார்கள். ஆறுமாதகால ஓவியப் பயிற்சி வகுப்புகள் மாணவர்களுக்கு முற்றிலும் இலவசம்.

பொதுமக்களிடம் மட்டும் ஒரு குறிப்பிட்ட தொகை கட்டணமாக பெறப்படுகிறது. பென்சில் டிராயிங் அக்ரிலிக், வாட்டர் கலர் மற்றும் தஞ்சாவூர் ஓவியங்கள், மரபு சார்ந்த ஓவியங்கள், நவீன ஓவிய முறைகளும் இங்கு கற்றுத்தரப்படுகின்றன. மட்டுமின்றி மாதம் ஒருமுறை தமிழ்நாடு முழுவதிலிருந்தும் அனுபவமிக்க ஓவியக் கலைஞர்களை வரவழைத்து பயிற்சி பட்டறைகளை நடத்துகிறோம். இதற்கிடையில் மாவட்ட ஆட்சியர் மாற்றமாக ஆகாஷ் நாகப்பட்டினம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றார். கலைக்கூடத்தில் தற்போது நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் செயல்திட்ட வடிவம் கொடுத்தார். ஆட்சியரின் முன்னெடுப்பினால் நாகை ஆர்ட் அகாடமி பிரபலமானது. இக்கலைக்கூடத்திற்கு தமிழில் ‘பொன்னி சித்திரக் கடல்’ என்று பெயரிட்டோம்” என்றவர், இங்கு ஓவியக்கலை பயிற்சி மட்டுமின்றி திரையிடல், திண்ணைப் பேச்சு போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது குறித்தும் விளக்கினார்.

“பொன்னி சித்திரக் கடல் கலைக்கூடத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் இருவர், கவின்கலைக் கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வினை எளிதாக எதிர்கொண்டு தேர்வாகியுள்ளனர். இந்தப் பயிற்சியில் பொதுமக்களாக இணைந்த பெண்கள் சிலர் ஆரி வேலைப்பாடு செய்வதற்காக ஓவியக் கலையை பயன்படுத்துகின்றனர். மாணவர்களின் கலைப்படைப்புகளை புத்தகக் கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தபோது பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். நாகப்பட்டினம் போன்ற முன்னேற துடிக்கும் மாவட்டத்தில் இது போன்ற முன்னெடுப்புகளை பொதுமக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றனர்.

பொதுவாக ஒவ்வொருவருக்கும் சினிமா சார்ந்த ரசனை மாறுபட்டிருக்கும். ஆனால், சினிமா என்பதை கதாநாயகன் மற்றும் கதாநாயகியின் பிம்பமாக மட்டுமே பார்த்திடாமல் சினிமா மொழி குறித்த ஆழமான புரிதலை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் ‘நிழலும் நிறங்களும்’ எனும் திரையிடல் நிகழ்ச்சியை தொடங்கினோம். சில முக்கிய தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி ஈரான், சீன மொழி திரைப்படங்கள் உட்பட உலக சினிமாவையும் மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். ஓவியக்கலை சார்ந்த திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் நடைபெறும் திரையிடல் நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட படத்தை குறித்த தங்கள் கருத்துகளையும் மக்கள் பகிர்ந்து கொள்வார்கள்.

ஞாயிற்றுக் கிழமைகளில் ‘திண்ணை பேச்சு’ நடைபெறும். இந்நிகழ்வில் வழங்கப்படும் பொதுவான தலைப்புகளில், உதாரணமாக கடலோடிகளின் கதை, நாகூரும் நல்லிணக்கத் தேரும், வயலோடு விளையாடு, வட்டார வழக்கு சொற்கள் போன்ற தலைப்புகளில் மேடை ஏறி பேச துடிப்பவர்கள் இங்கு பொது மக்களுடன் குழுவாக அமர்ந்து சிறப்புரையாற்றுவாற்றுவார்கள். சென்ற வருடம் கனிஷ்கா என்ற திருநங்கை வந்து கலந்து கொண்டு ‘திருநங்கைகள், பார்வைக்கு அப்பால் விரியும் வாழ்வு’ என்கிற தலைப்பில் மக்களுடன் உரையாடி திருநங்கைகள் மீதான சமூகத்தின் பார்வையை முன்வைத்து தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட திண்ணை பேச்சு நிகழ்வு சிறப்பாக அமைந்தது. வார விடுமுறை தினங்களில் நடைபெறும் இந்நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கலந்து கொண்டு அர்த்தமுள்ள வகையில் நேரத்தை செலவிட்டு புத்துணர்வு பெறுகின்றனர்” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“பொன்னி சித்திரக் கடல் கலைக்கூடத்தின் நீட்சியாக ஓவியக்கலையுடன் நிறுத்திவிடாமல் நிகழ்த்துக் கலைகளுக்கான பயிற்சிக்கூடம் தொடங்கியுள்ளோம். கடந்த ஜனவரி 29ம் தேதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் சிறப்பு விருந்தினராக வந்து ‘பொன்னி கலையகம்’ பயிற்சிக்கூடத்தை திறந்து வைத்தார். மாணவர்களின் உடல் மொழி, தாள உணர்வு மற்றும் மேடை நம்பிக்கையை வளர்க்கும் வகையில் கரகம், பரதம், கிராமிய நடனம், பிரீஸ்டைல் நடனம், சிலம்பம் போன்ற நடனப் பயிற்சிகளும், மிருதங்கம், பறை, நாதஸ்வரம், வயலின், வீணை உட்பட 14 இசைக் கருவி மற்றும் பாடல் பயிற்சிகளும், மாணவர்களின் நடிப்புத் திறன், வெளிப்பாடு மற்றும் சமூக விழிப்புணர்வை வளர்க்கும் வகையில் இலக்கிய, நாடகம், நவீன நாடகம், தெருக்கூத்து, வீதி நாடகம், பொம்மலாட்டம், மைமிங், பல குரல் பயிற்சி போன்றவற்றை பயிற்றுவிக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். இக்கலைகளை பயிற்றுவிக்க 40 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மக்களுக்காக மாவட்ட ஆட்சியரின் இந்த முயற்சிகள் செயல்திட்டமாக உருவெடுத்து தற்போது அரசின் மேற்பார்வையில் சிறப்பாக இயங்கி வருகின்றன.

அமிர்தவர்ஷினி, ஓவியப் பயிற்சி பெற்ற மாணவி.“ஆறுமாத கால ஓவியப் பயிற்சி வகுப்பில் பயிற்சிப் பெற்றேன். நான் வரைந்த ஓவியங்கள் நாகை புத்தகத் திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது எனக்கு பெருமையாக இருந்தது.”சிவப்ரியா, ‘நிழலும் நிறங்களும்’ நிகழ்ச்சியில் பங்கேற்றவர்.“பொன்னி சித்திரக் கடல் கலைக்கூடத்தில் திரையிடப்பட்ட THE RED BALLOON என்கிற திரைப்படம் பார்த்தேன். பலூன் உடன் பயணிக்கும் ஒரு சிறுவனின் இக்கதையில், ஒன்றின் மீது நாம் வைக்கும் அன்பை நாமே துறந்ததாலும் அது நம்மையே தொடரும் என்பதை எனக்கு உணர்த்தியது.”

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

Related Stories: