இயற்கை தயாரிப்புகளுக்கு வெளிநாடுகளில் மவுசு அதிகம்!

நன்றி குங்குமம் தோழி

“இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா போன்ற பகுதிகளில் இயற்கை தயாரிப்புகளுக்கு மவுசு அதிகம். ஆனால், அவை செயற்கை தயாரிப்புகளை விட மூன்று மடங்கு அதிக விலையில் விற்கப்படுகின்றன. அங்கு நான் ஒரு மாணவியாக இருந்தபோது அவற்றின் விலை இவ்வளவு அதிகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை உணர்ந்து, குறைந்த விலையில் தரமான தயாரிப்புகளை வழங்க யோசித்தேன். 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அதற்கான ஒரு சோதனை முயற்சியைத் தொடங்கினேன்” எனும் பூஜிதா லட்சுமி, அறிவியல் துறையில் பணியாற்றி வருகிறார். ஸ்காட்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய இவர், தன் தாய் மற்றும் உறவினருக்கு பயிற்சியளித்து, கியா நேச்சுரல்ஸ் (Khya Naturals) எனும் ப்ராண்ட் உருவாக வழிவகுத்துள்ளார்.

“சென்னையில் கல்லூரிப் படிப்பை முடித்ததும், 2018ம் ஆண்டில் UK சென்று ஸ்காட்லாந்தின் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிப்பிற்காக முன்பதிவு செய்வதற்காக சென்றிருந்தேன். அதைத் தொடர்ந்து 2019ம் ஆண்டில் கோவிட்-19 தொற்று காலத்தின் போது, ஸ்காட்டிஷ் காஸ்மெடிக் பள்ளியில் இயற்கை முறையில் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு தயாரிப்புகளை உருவாக்குவது குறித்த டிப்ளமோ படிப்பையும் படித்தேன். இயற்கை தயாரிப்புகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அவற்றை ஆரோக்கியமாக மலிவான விலையில் மக்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும் என்று தோன்றியது. நான் இந்தியா வந்ததும், அங்கு கற்று வந்த படிப்பை பயன்படுத்த நினைத்து வீட்டில் அவற்றை முயற்சி செய்து பார்த்தேன்.

பின்னர் வீட்டில் என் அம்மா பால சுதா மற்றும் என் மாமா மகளான விஷ்ணுபிரியாவுக்கு சருமம் மற்றும் கேசப் பராமரிப்பு தயாரிப்புகளுக்கான பயிற்சியினை அளித்தேன். என் மாமா மகள் ஒரு மருந்தாளுநர். கற்றுக் கொண்ட பின் இருவரும் வீட்டிலேயே சோப்பு வகைகள், லிப் பாம்கள் போன்றவற்றை தயாரித்தனர். அக்கம்பக்கத்தினர் மற்றும் நட்பு வட்டங்களிலும் அவர்களின் தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இயற்கை தயாரிப்புகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால், எங்க தயாரிப்புகளை ப்ராண்டாக உருவாக்க அவர் விரும்பினார். என் அம்மா மற்றும் விஷ்ணுபிரியா இருவரும் இணைந்து தொழிலை துவங்கி னார்கள். நான் தயாரிப்பு முறைகளை உருவாக்குகிறேன், விஷ்ணுபிரியா தரக் கட்டுப்பாடு மற்றும் உற்பத்தியை கவனிக்கிறார். ஒரு இல்லத்தரசியாக இருந்த என் அம்மாவுக்கு, ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றவும், நிதி ரீதியான ஆதரவைப் பெறவும்

இத்தொழில் உதவியுள்ளது. அண்டை வீட்டாரைத் தாண்டி பல புதிய மனிதர்களுடன் பழகவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் இந்தத் தொழில் அவருக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆந்திராவில் எங்களின் தயாரிப்புகளுக்கான சிறிய உற்பத்தி நிலையம் உள்ளது. விஷ்ணுபிரியா அதனை பராமரித்து வருகிறார்” என்றவர் இயற்கை தயாரிப்புகள் குறித்து விளக்கினார். “சோப்பு வகைகள், லிப் பாம்கள், ஃபேஸ் மாஸ்க்குகள், மாய்ஸ்சரைசர்கள், பாடி பட்டர், ஷாம்பூக்கள் மற்றும் பாத பராமரிப்பு பொருட்கள் என 40 வகையான முழு உடல் பராமரிப்பு தயாரிப்புகளை வழங்குகிறோம். இந்த தயாரிப்புகள் மருத்துவ குணங்கள் கொண்ட தாவரங்கள், மலர்கள் போன்ற மூலிகைச் சாறுகளை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும் இதன் சிறப்பம்சம் என்னவென்றால் அறிவியல் பூர்வ முறையில் மினிமலிஸ்டிக் அணுகுமுறையைக் கொண்டது.

உதாரணத்திற்கு ஒரு தயாரிப்பில் பலவகையான மூலிகைகளையும் நறுமணத்தையும் சேர்த்தால்தான் நிறைய பலன்கள் கிடைக்கும் என்பது போல் அல்லாமல் அந்த தயாரிப்புக்கு தேவையான பொருட்கள் மட்டுமே சேர்க்கப்படுகின்றன. மேலும், இவற்றில் சேர்க்கப்படும் எசென்ஷியல் ஆயில்கள் சரியான அளவில் பயன்படுத்தப்படாவிட்டால் சரும எரிச்சல் ஏற்படலாம் என்பதால், பொருட்களின் அளவுகளில் கவனமாக இருக்கிறோம்.

பாதாம் எண்ணெய், திராட்சை விதை எண்ணெய் மற்றும் ஷியா பட்டர், கோகோ பட்டர், மேங்கோ பட்டர் போன்றவற்றை இந்தியா முழுவதிலும் இருந்து சேகரிக்கிறோம். லாவண்டர், வெட்டிவேர், லெமன் கிராஸ், ரோஜா மற்றும் மல்லிகை போன்ற எட்டு வகையான அத்தியாவசிய எண்ணெய்களை பயன்படுத்துகிறோம். இதில் செம்பருத்தி மற்றும் கறிவேப்பிலை உள்ளிட்ட 14 மூலிகைப் பொருட்கள்

சேர்க்கப்பட்டுள்ளன. இது தலையின் தோல் பகுதியை வறட்சி அடையச் செய்யாமல் கூந்தலுக்கு நல்ல பொலிவைத் தருகிறது. தயாரிப்புகள் அனைத்தும் ஆன்லைன் மற்றும் மொத்த விற்பனை முறையிலும் வழங்கப்படுகின்றன. ஹைதராபாத், நெல்லூர், குண்டூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள மறு விற்பனையாளர்களுக்கும் தயாரிப்புகளை வழங்கி வருகிறோம். மேலும், நியூசிலாந்து, சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் அனுப்புகிறோம்.

யுகேவை விட இந்தியாவில் இயற்கை மூலிகைகள் மற்றும் மலர்கள் எளிதாகக் கிடைப்பதால், இங்கு தொழில் தொடங்குவது எளிதாக இருந்தது. எங்களின் தயாரிப்புகளை மறு விற்பனை செய்ய விரும்புகிறவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்” எனும் பூஜிதா எதிர்காலத்தில், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகள் மற்றும் வருமானம் இல்லாத பெண்களுக்கு இந்தத் தயாரிப்புகளை செய்யக் கற் றுக் கொடுத்து, அவர்களை சுய சார்பு உடையவர்களாக மாற்ற விரும்புகிறார்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

Related Stories: