ராஜேந்திர சோழனின் வரலாறு ஒரு தேடல்!

நன்றி குங்குமம் தோழி

‘‘ஒவ்ெவாரு குழந்தையும் பாட்டி அல்லது அம்மா சொல்லும் கதைகளை கேட்டுதான் தூங்குவார்கள். இதுதான் நாம் தொன்றுதொட்டு வரும் பழக்கம். நானும் அப்படித்தான். என் பாட்டி சொன்ன கதைகளை கேட்டுதான் வளர்ந்தேன். அந்தக் கேள்வி ஞானம்தான் என்னை ஒரு எழுத்தாளராக மாற்றியுள்ளது’’ என்கிறார் பெங்களூரூவைச் சேர்ந்த ருனாக் சிவ்.

11ம் வகுப்பு படிக்கும் இவர், பொன்னியின் செல்வன் கதையினை படித்து அதன் மேல் ஈர்ப்புக் கொண்டு, ராஜேந்திர சோழன் பற்றி ‘ஆழிக்கொண்டான்’ என்ற பெயரில் கதை புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ‘‘நான் சின்னக் குழந்தையாக இருக்கும் போது என் பாட்டி எனக்கு நிறைய கதைகளை சொல்வார். கற்பனை கதைகள் மட்டுமில்லாமல், ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளையும் அவர் எனக்குச் சொல்லியிருக்கிறார். அப்படித்தான் அவர் எனக்கு பொன்னியின் செல்வன் கதையினை சொன்னார்.

அவரிடம் கேட்ட கதைகளை நான் என் பள்ளியில் வாசிப்பேன். என்னை பள்ளியில் பலரும் ‘கதைச் சொல்லி’ என்ற பட்டப் பெயரில்தான் அழைப்பார்கள். ஒரு முறை ஆங்கில தேர்வில், குறிப்புகள் கொடுத்து அதை சார்ந்து கதை எழுதச் சொல்லி கேள்விக் கேட்டிருந்தார்கள். நான் பாட்டியிடம் பல கதைகளை கேட்டிருந்ததால், கற்பனையாக ஒரு கதையினை அந்த குறிப்புக் கொண்டு எழுதினேன்.

அதுதான் நான் முதன் முதலில் எழுதிய சிறுகதைன்னு சொல்லணும். அதைப் பார்த்து என் ஆசிரியர் எனக்குள் இருக்கும் எழுத்துத் திறமையை கண்டறிந்து மேலும் என்னை ஊக்குவித்தார். அதன் பிறகு என் மனதில் தோன்றும் கருவினை நான் சிறுகதைகளாக வடிவமைக்க ஆரம்பித்தேன். மேலும், எனக்கு வரலாறு பிடிக்கும் என்பதால், அது சார்ந்து புத்தகங்களை தேடி தேடிப் படிக்க ஆரம்பித்தேன்’’ என்றவர், சோழ ஆட்சி குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

‘‘சோழர்கள் பற்றி தேடி தேடிப் படித்த போதுதான் எனக்கு பொன்னியின் செல்வன் கதையினை படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. கோவிட் காலத்தில் அதற்கான வாய்ப்பு கிடைத்ததால், அந்தக் கதையினை முழுதும் படித்து முடித்தேன். என்னுடைய ஆய்வுகளில் பேராசிரியர் தெய்வநாயகத்தின் புத்தகங்களை பின்பற்றினேன். மேலும், நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய ‘த சோழாஸ்’ என்ற புத்தகமும் என்ைன வெகுவாக கவர்ந்தது. அவர் கல்வெட்டு நிபுணர், வரலாற்று ஆசிரியர், சமஸ்கிருத அறிஞர், ெதால்பொருள் ஆய்வாளர்.

மேலும், சோழ வரலாறு, கலாச்சாரம் குறித்த ஆராய்ச்சிக்கு பெயர் போனவர். அவரின் கண்டுபிடிப்புகளை என்னுடைய கதைகளத்திற்கு பயன்படுத்திக் கொண்டேன். எனக்கு வரலாறு மேல் தனிப்பட்ட ஈடுபாடு இருந்ததால், என்னைப் பற்றிய வரலாறு மற்றும் என்னுடைய பரம்பரை கலாச்சாரம் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்பினேன். அந்த ஆய்வில் முற்பட்ட போதுதான் ஏன் சோழ வரலாற்றை சித்தரித்து ஒரு கதை எழுதக்கூடாதுன்னு எனக்குள் தோன்றியது. அப்படித்தான் ஆழிக்கொண்டான் உருவானது.

‘ஆழி’ என்றால் கடல், ‘கொண்டான்’ என்றால் ஆட்சி செய்தவன் என்று பொருள். ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலங்கள், எவ்வாறு மற்ற நாடுகளுடன் போர் புரிந்து தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார் என்ற வரலாற்றுடன் என் கற்பனைக் கதையினை இணைத்திருக்கிறேன். இதில் பொன்னியின் செல்வன் கதையில் உள்ள கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்திருக்கிறேன். சொல்லப்போனால் 20% உண்மை சம்பவங்களும் 80% என் கற்பனை கதை. இந்தப் புத்தகத்தின் முதல் பாகம் முடிக்கும் போதே கதையின் இறுதி பாகம் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன்.

நான் வசிப்பது பெங்களூர் என்பதால், என்னுடைய ஆய்வகம் முழுக்க முழுக்க இணையம் மற்றும் புத்தகங்கள் சார்ந்து தான் இருந்தது. ஒருமுறை என் அப்பா என்னை திருப்பரம்பியத்திற்கு அழைத்து சென்றிருந்தார். ராஜேந்திர சோழன் போர் புரிந்த இடம். அங்கு சென்ற போது நான் அந்த இடத்திற்கு ஏற்கனவே வந்திருப்பது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. முதல் முறை சென்றது போல் இல்ைல. மேலும், எனக்குள் இங்கு வருவதற்கு உனக்கு இவ்வளவு காலம் எடுத்ததா என்று என் உள் மனம் கேட்டது போலவும் உணர்ந்தேன். அந்த நிகழ்வினை என்னால் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. இந்தப் புத்தகம் தற்போது மார்க்கெட்டில் விற்பனையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் எழுத திட்டமிட்டிருக்கிறேன். அந்தப் புத்தகம் முழுக்க முழுக்க ராஜேந்திர சோழன் கைப்பற்றிய நாடுகள் மற்றும் வரலாற்று மர்மங்கள் சார்ந்திருக்கும்.

இந்தப் புத்தகத்தில் நம்முடைய கலாச்சாரம் மற்றும் வரலாறு பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். நம்முடைய கலாச்சாரம் மற்றும் வரலாறு இறந்துவிடக்கூடாது. அதனை எதிர்கால தலைமுறையினரும் படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் அதனை என் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறேன். இன்று செல்போன் அனைவரையும் ஆட்கொண்டு இருக்கிறது. புத்தகம் படிக்கும் பழக்கம் இளம் தலைமுறையினரிடம் இல்லை. அந்தப் பழக்கத்தினை அவர்களும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒருமுறை பழகிவிட்டால் போதும், அதுவே தொடர ஆரம்பிக்கும். மேலும், இன்றைய தலைமுறையினரை கவரும் வகையில் புத்தகங்களும் வெளிவர வேண்டும். காரணம், ஜென் Z தலைமுறையினர் ஜப்பானியரின் ‘மாங்கா’ காமிக்ஸ் புத்தகத்தினை விரும்பி படிக்கிறார்கள். அதேபோல் நம்முடைய புத்தகங்களும் வெளியானால், நாளடைவில் அவர்களும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை பின்பற்ற ஆரம்பிப்பார்கள்’’ என்றார் ருனாக் சிவ்.

தொகுப்பு: ரிதி

Related Stories: