நியூஸ் பைட்ஸ்

நன்றி குங்குமம் தோழி

அச்சுறுத்தும் புற்றுநோய்

இன்று உலகை அச்சுறுத்தும் ஒரு கொடிய நோய் என்றால் அது புற்று நோய்தான். ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் பல்வேறு விதமான புற்றுநோய்களால் சுமார் ஒரு கோடிப் பேர் மரணமடைவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இதில் பாதிக்கப்பட்டு, உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை தனிக்கதை. 2050ல் புற்றுநோயால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியாக உயரும் என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கிறது. அப்படியென்றால் வருங்காலங்களில் புற்றுநோயின் தாக்கம் அதிகமாக இருக்கலாம்.

தங்கத்தில் முதலிடம்!

ஒரு நாட்டின் முக்கியமான சொத்துக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, தங்கம். நாட்டில் பொருளாதாரம் சீர்குலையும் போது தங்கத்தை எளிதாக வர்த்தகம் செய்து, பொருளாதாரச் சூழலைச் சமாளிக்க முடியும். மட்டுமல்ல, தங்கம் பாதுகாப்பானது; நம்பகமானது.

இத்தகைய காரணங்களால் தங்கத்தை அதிகமாக இருப்பு வைக்க ஒவ்வொரு நாடும் போட்டி போடும். நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்லும் தங்கத்தின் விலைக்கு மத்தியில், உலகிலேயே அதிகளவில் தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியல் வெளியாகிறது. உலகிலேயே அதிகமான தங்கத்தை வைத்திருக்கும் நாடு என்ற பெருமையைத் தொடர்ந்து தன்வசம் வைத்திருக்கிறது, அமெரிக்கா. ஆம்; 8,133.46 டன் தங்கத்தை இருப்பு வைத்திருக்கிறது, அமெரிக்கா. இதற்கு அடுத்த இடத்தில் ஜெர்மனி இருக்கிறது. ஜெர்மனியிடம் 3,350.25 டன் தங்கம் இருக்கிறது. இதற்கடுத்ததாக 2,451.84 டன் தங்க இருப்புடன் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது, இத்தாலி.

புகைப்பிடித்தலை கண்டுபிடிக்கும் கருவி!

சமீபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்தக் கருவியை பொது இடங்களில் மாட்டிவிட்டால் போதும். அந்த இடங்களில் யாராவது புகைப்பிடித்தால் காட்டிக் கொடுத்துவிடும். அத்துடன் புகைப்பிடிப்பவரிடம் எச்சரிக்கையும் செய்யும். அதாவது, பொது இடங்களில் யாராவது புகைப்பிடித்துக் கொண்டிருந்தால், இந்தக் கருவியிலிருந்து குழந்தை இருமலில் அவதிப்படுவது போலவும், சிகரெட் குடிக்கும் இளைஞனை பாட்டி திட்டுவது போலவும் குரல் கேட்கும். இந்தக் கருவிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஜோரான விற்பனை

கடந்த 2025ம் வருடத்தின் காதலர் தினத்தில் பரிசுப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே இந்தியர்கள் 25 ஆயிரம் முதல் 28 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவழித்திருக்கின்றனர். இதில் தங்களின் காதலிகளுக்கும், மனைவிகளுக்கும் பரிசாகக் கொடுப்பதற்காக தங்கம் மற்றும் வரை நகைகள் வாங்குவதற்காக மட்டுமே 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவழித்திருக்கின்றனர். இந்நிலையில் 2026-ம் வருடத்தின் காதலர் தினத்தில் பல நிறுவனங்கள் தனியாக இருப்பவர்களின் மீது அதிக கவனம் செலுத்தியிருக்கிறது. அதாவது, சுய காதல், சுய டேட்டிங் செய்பவர்களுக்காக பலவிதமான பரிசுப் பொருட்களை சந்தைக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். இதன் விற்பனையும் ஜோராக நடந்திருப்பதுதான் இதில் ஹைலைட்.

பணம்தான் காரணம்!

இன்று 97 சதவீத இளைஞர்களின் மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம், பணம்தான் என்று அதிர்ச்சியளிக்கிறது சமீபத்திய ஆய்வு. ஆம்; பொருளாதார அழுத்தமும், நிதி நெருக்கடியும் இளைஞர்களுக்கு அதிகளவில் மன அழுத்தத்தைக் கொடுக்கின்றன என்கிறது அந்த ஆய்வு. அதே நேரத்தில் இளைஞர்கள் அதிகப்படியான மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது, ஒரு முக்கியமான சமூகப் பிரச்னையாகவும் உருவெடுத்துள்ளது.

முன்பெல்லாம் தகுதிக்கேற்ற வேலை கிடைக்குமா என்ற எதிர்காலம் குறித்த பயம் அதிகளவில் இளைஞர்களை பாதித்தது. ஆனால், இன்று சமூக வலைத்தளங்களின் தாக்கத்தினால் இளைஞர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாகச் சொல்கின்றனர். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் வெளியாகும் மற்றவர்களின் வாழ்க்கையை பார்த்து, தன் வாழ்க்கையின் தரம் குறைவானது என்று பல இளைஞர்கள் நினைக்கின்றனர். இது அவர்களின் மனதை வெகுவாகப் பாதித்து, தங்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை; எதையோ இழந்துவிட்டோம் என்ற பதற்றத்தை அவர்களுக்குள் உருவாக்குகிறது என்கின்றனர்.

தொகுப்பு: த.சக்திவேல்

Related Stories: