நன்றி குங்குமம் தோழி
தளர்வாக உள்ளே வந்த சாமிநாதன் சோபாவில் அமர்ந்தார். சமையலறையில் வேலையாக இருந்த நான் அவசரமாக கூடத்திற்கு வந்தேன்.
“என்னங்க… வீடு பார்த்தீங்களே
பிடிச்சிருந்ததா?” என்றபடி ஆவலாய் அவரருகே அமர்ந்தேன்.
“ம்… வீடு புடிச்சிதான் இருக்கு. ஆனா, வீட்டுக்காரங்க பெட் அனிமல்ஸ்
எதுவும் வளர்க்கக்கூடாதுன்னு
கண்டிப்பா சொல்லிட்டாங்க…”
என் முகம் வாடிப் போவதை பார்க்க பிடிக்காதவரைப் போல் காலையில்
படித்துவிட்டுப் போட்டசெய்தித்தாளையே மறுபடியும் பிரித்தார்.
“ப்ச்… எல்லா வீட்லயும் இப்படியே சொன்னா நாம என்ன பண்றது?”
“ம்…வேற வீடு பார்ப்போம். எல்லாருமா இப்படி இருப்பாங்க?” என்றார்.
அதே சமயம்… அம்முக்குட்டியின் குரல் கேட்டது.
“மியாவ்….”
திறந்திருந்த வாசல் கதவு வழியே உள்ளே வந்த அம்முக்குட்டி தாவி ஏறி என் கணவரின் மடியில் விரித்திருந்த செய்தித்தாளின் மீது பொத்தென அமர்ந்தது.அவர் அதை மெல்ல வருடிவிடத் தொடங்கினார். அவர் வருட வருட கண்களை மூடிக்கொண்டு சுகமாக தாலை சாய்த்துக் கிடந்தது.பாவம்… அம்முக்குட்டி. இதனால்தான் இத்தனை பிரச்னையும் என்பதை அறியுமா? ஒரு சமயம் எல்லாமே தெரிந்ததால்தான் எங்கே தன்னை விட்டுவிட்டுப் போய்விடுவார்களோ என இன்னும் இழைந்து குழைந்து கிடக்கிறதா?
‘ம்யாவ்…. ம்யாவ்…’ என அடிக்குரலில் ஒருவித தேவையை உணர்த்தி குரல் கொடுத்தது.அதனுடைய குரலின் பலவித சத்தத்திற்கு எனக்கு மட்டுமே அர்த்தம் புரியும். இது பாலுக்கான குரல்.அதற்கான ப்ளாஸ்டிக் கிண்ணத்தில் பாலை ஊற்றி எடுத்து வந்தேன். ‘மொச்…மொச்’ என்ற ஓசையோடு தன் பசியாற்றிக் கொண்டிருந்த அம்முக்குட்டி நெஞ்சை என்னவோ செய்தது. இந்த வீட்டிற்கு குடிவந்து சரியாய் ஒரு மாதம் இருக்கும். ஒரு விடியற்காலையில் அந்தக் குரல் என்னை எழுப்பியது. பிறந்த குழந்தை அழும் சத்தம்.‘அக்கம் பக்கம் யாருக்காவது குழந்தை பிறந்திருக்குமோ?’ என் சந்தேகத்தை உறங்கிக் கொண்டிருந்த என் கணவரை எழுப்பி சொல்ல, அவர் “ப்ச்… பூனைக்குட்டி கத்துது” என்று கூறிவிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டார்.
அதற்கு மேல் என்னால் படுக்க முடியவில்லை. தொடர்ந்து அழுகுரல். எழுந்து கொல்லைப் பக்கம் வந்தேன். பின் பக்க விளக்கைப் போட்டுவிட்டு கதவைத் திறந்தேன். சாய்வாய் ஓடி வெளிப்பக்க குளியலறையின் மேல் தளத்தில் அந்த பூனைக்குட்டி இருந்தது..! உள்ளங்கையளவே இருக்கும். தங்க நிறத்தில் வெள்ளைக் கோடுகள் தீட்டிய உடம்புடன் குரல் கொடுத்துக் கொண்டிருந்தது.பார்த்ததுமே உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு உண்டானது.
ஆசையாக “வா….” என கையசைத்தேன். மிரண்டு பின் வாங்கியது. கொஞ்சம் பாலை ஒரு கிண்ணத்தில் ஊற்றி எடுத்து வந்து படிக்கட்டில் வைத்தேன். பாலுக்கு மயங்காத பூனை உண்டா என்ன? தயங்கி தயங்கி இறங்கி தரைக்கு வந்தது.ஆனாலும், கிண்ணத்தின் அருகே வரவில்லை. பயந்து கொண்டே தூர நின்றது.என்னை அந்நியமாகப் பார்ப்பது அதன் விழிகளில் பயமாய் தெரிந்தது. மெல்ல கதவை ஒருக்களித்த வண்ணம் சாத்திவிட்டு கவனித்தேன்.
அக்கம் பக்கம் பார்த்துவிட்டு மெதுவாக அடி மேல் அடி எடுத்து வைத்து வந்து குடித்தது. சின்னஞ்சிறு ரோஜா இதழைப் போன்ற தன் நாக்கை நீட்டி அது நக்கி நக்கி குடித்தது என்னுள் தாய்மையை சுரக்க வைத்தது. எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது.அடுத்தடுத்த நாட்களில் இப்படி பால் வைத்ததன் பயன் வீட்டுக்குள் வருவதும் என் மடியில் படுத்துக் கொள்வதுமாக பாசம் வைக்கத் தொடங்கியது.பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதால் தனிமையின் கொடுமையில் தவித்த எனக்கு அது மனநிறைவைத் தந்தது. பொழுது மிக அழகாக போகத் தொடங்கியது. அதனுடன் பேசுவது, பாடுவது, விளையாடுவது என என் நேரங்கள் பூனைக்குட்டியுடன் ஐக்கியமாக வைத்தது. அம்முக்குட்டி என பெயரும் வைத்து அழைக்கத் தொடங்கினேன்.
எல்லா மகிழ்ச்சியும் பக்கத்து போர்ஷனில் அந்த டீச்சரம்மா குடி வரும் வரைதான். பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்தது. அவசரத்துக்கு எங்காவது போக நேர்ந்தால்… ‘இந்த அம்முக்குட்டிக்கு கொஞ்சம் பால் கொடுங்க’ என சொல்லிவிட்டுப் போகலாம் என ஒரு நிம்மதியும் வந்தது.அந்த டீச்சரம்மா ரிடையர்டு டீச்சரம்மா. ஒரே மகன். ஹைதராபாத்தில் படிக்கிறான் என்று வந்த அன்று அறிமுகப்படுத்திக் கொண்டாள் அந்த டீச்சரம்மா.
வயதான அம்மா. என்னைப் போலவே பேச்சுத் துணைக்கு ஏங்கிக் கிடப்பாள் என நான் நினைத்த நினைப்பு தவறானது. நான்கு மணிக்கெல்லாம் எழுந்து குளித்துவிட்டு பூஜையை ஆரம்பித்தால் பாடிக்கொண்டே இருப்பார். பூஜை பூஜை என்நேரமும் பூஜை. சிறிது நேரம் கிடைத்தால் கூட பக்கத்துக் கோயிலுக்குப் போவாரே தவிர படிக்கட்டில் உட்கார்ந்து ஊர் கதை பேசும் வழக்கமில்லை.அதுவும் அவர் மேல் பெரும் மதிப்பைத்தான் ஏற்படுத்தியது.அவர் வீட்டுப்பக்கம் பூனை போய்விட்டால் அதை விரட்டிவிட்டு அந்த இடத்தில் தண்ணீர் விட்டு கழுவுவது எனக்குள் முதன் முறையாக சுருக்கென்றது.
பூனையை அவர் வீட்டுப்பக்கம் போகவிடாமல் பார்த்துக் கொண்டேன். பூனையை அவருக்கு பிடிக்கவில்லை என்பதை புரிந்து கொண்டேன். பசுவை தேடி போய் பால் சோறு தருவார், காக்கைக்கு சாப்பாடு வைப்பார். அது சாப்பிட்ட பின்தான் தான் சாப்பிடுவதாக சொல்லுவார். பூனைக்கு ஒரு நாளும் பால் வைத்ததில்லை.அந்த அம்மையார் எத்தனை கோபம் மிகுந்தவர் என நக்கீரியாக மாறிய நிமிடத்தில் தெரிந்து கொண்டான்.பெற்றப் பிள்ளைகளே ஒரு வயதுக்கு மேல் வீட்டிற்கு அடங்காத போது பூனை அடங்குமா? அது புத்தியை காட்டாமல் இருக்குமா? ஒருநாள் எங்கிருந்தோ ஒரு எலியை இழுத்து வந்து வீட்டு வாசலில் கடித்து துப்பி சாப்பிட்டு போட்டிருந்தது. வாசல் என்றால்… இரு போர்ஷனுக்கும் ஒரே வாசல்.
நாலு மணிக்கெல்லாம் காரைக்கால் அம்மையார் எழுந்து கொள்வதால் நான் பார்ப்பதற்கு முன்னால் அவர் பார்த்துவிட அவ்வளவுதான். உலகமே பிரளயம் ஆகிவிட்டது. ‘தகதகவென ஆடவா…’ என ஆடிவிட்டார். கதவை போட்டு படபடவென அடித்து என்னை எழுப்பி, “இந்த கண்றாவியைப் பாரு. உன் பூனை பண்ணின அசிங்கத்தை. கருமம் கருமம். சீக்கிரமா சுத்தம் பண்ணு”என கண்களையும் மூக்கையும் மூடிக்கொண்டு உள்ளே ஓடி கதவை சாத்திக் கொண்டுவிட்டார்.நான்கு மணிக்கெல்லாம் கண் எரிச்சலுடன் வாசலை கழுவி, டெட்டால் போட்டு சுத்தம் செய்து நிமிருவதற்குள் என் முதுகெலும்பு உடைந்துவிட்டது.
“நான் உனக்கு என்னடா குறை வச்சேன். சிக்கன், மட்டன், மீனு, கருவாடெல்லாம் வாங்கித்தானே போடறேன். எதுக்குடா இப்படி எலியை பிடிச்சு அசிங்கம் பண்ணி வைக்கிறே…?” நான் அழ என் கணவர் சிரித்தார்.“பூனை எலியைப் பிடிக்காம என்ன புலியையா பிடிக்கும்? பூனையின் படைப்பே எலி பிடிக்கத்தான். நீ என்னதான் வீட்டுக்குள் வச்சு பாலும் நெய்யும் கொடுத்தாலும் அதுக்கு எலி பிரியாணி சாப்பிட்ட மாதிரி ஆகுமா?”
உண்மைதானே? எலியை பிடிக்காதே என பூனைக்கு எப்படி அறிவுறுத்த முடியும்.அன்றையிலிருந்து பூனை காரைக்கால் அம்மையாருக்கு வெளிப்படையான பரம எதிரியாகிவிட்டது. பூனையை அவருடைய வீட்டுப்பக்கம் பார்த்தால் உடனே ஜில்லென தண்ணீரை எடுத்து அதன் மேல் ஊற்றத் தொடங்கினார். மனிதர்களாலே தாங்க முடியாத நாக்பூரின் டிசம்பர் மாத குளிர் அந்த மென்மையான பஞ்சு போன்ற ஜீவனுக்கு எப்படியிருக்கும்? நடுநடுங்கி வெடவெடத்து உள்ளே ஓடிவந்து ஒடுங்கும் அந்தக் குட்டியை பார்க்க என் இதயம் அப்படியே வெடித்துப் போனது. கண்களில் கண்ணீர் பொங்க பூனையை துவட்டியபடியே சென்று முறையிட்டு மொக்கை வாங்கினேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
“இப்படி இந்தக் குளிர்ல பச்சைத் தண்ணியை ஊத்தறீங்களே… இது பாவம் இல்லையா? பாவம் வாயில்லா ஜீவன்…”“பாவமா? கோழியையும் ஆட்டையும் அடிச்சி திங்கறீங்களே… அதைவிடவா இது பாவம்..?” சுளீரென அந்தம்மா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நான் நின்றுவிட்டேன்.“நீங்க அசைவம் போடறதாலதான் அது எலியை தேடிப் போவுது. கருமம்… கருமம். இந்தப் பூனையால என்னோட பூஜையே கெட்டுப் போவுது. இந்தப் பூனையை பார்த்தாலே எனக்கு கெட்ட கோவம் வருது. இதை கொண்டு போய் எங்காவது விட்டுட்டு வாங்க.
இல்லாட்டி நான் ஓனர்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன்…”இவர் சொன்னதைப் போல் அசைவம் கொடுப்பதால்தான் அது எலியை தேடிப் போகிறதோ என அன்றையிலிருந்து பூனைக்கு வெறும் பால் சோறுதான். அசைவ பூனையை சைவமாக வளர்க்கத் தொடங்கினோம். பூனையால் நாங்களும் சைவத்திற்கு மாறிவிட்டோம். வீட்டை விட்டு வெளியே அனுப்புவதில்லை. ஆனாலும், சில சமயம் எங்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு எங்காவது போய் எலியை பிடித்துக் கொண்டு வந்து வாசலில் போட்டு கிழித்து சாப்பிடும்.“அசைவ ஜீவனை சைவமா மாத்த முடியுமா?” என என் கணவர் சிரிப்பார்.ஆனால், டீச்சரம்மா பத்ரகாளியானார்.
சொன்னதைப் போல் வீட்டு உரிமையாளரிடம் புகார் கொடுத்ததில் பூனையை எங்காவது கொண்டு போய் விடுங்க. இல்லாட்டி வீட்டை காலிப் பண்ணுங்க…”வீட்டுக்காரர் உறுதியாக சொல்லிவிட்டார். வீடு கிடைக்கவில்லை. எங்காவது கொண்டு விட்டுவிடலாம் என இரண்டு முறை சாக்குப்பையில் போட்டுக் கொண்டு போய் விட்டும் மறுநாள் வீடு தேடி வந்துவிட்டது. இரவு இருவரும் இதே கவலையுடன் வெகுநேரம் விழித்திருந்துவிட்டு விடியற்காலையில்தான் உறங்கினோம்.
தாமதமாக எழுந்த போது பூனைக்கு பால் வைக்க தேடிய போது பூனையை காணவில்லை. ஜன்னலை சாத்த மறந்ததால் வெளியே ஓடியிருக்கிறது.எங்காவது போய் எலியை கொண்டுவந்து போடப் போகிறது என திக்திக் என்ற நெஞ்சோடு இருந்த எங்களுக்கு ஏமாற்றம். அன்றைக்கு முழுவதும் ஆளையே காணோம். மறுநாள்… அதற்கு மறுநாள்…
அடுத்தடுத்த நாட்களில் வரவேயில்லை.“நாம படற கஷ்டம் புரிஞ்சு அதுவே எங்கோ ஓடிட்டுப் போலிருக்கு…” என் கணவர் சொன்ன போது தீராத ஒரு வெறுமையில் வீழ்ந்துவிட்டேன்.“சுமதி… சுமதி…”டீச்சரோட குரல்தான். “சனியன்… இப்பதான் இதுக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கும்…”முகமெல்லாம் மகிழ்ச்சி பிரகாசமாக டீச்சர் நின்றிருந்தார்.“சுமதி…எனக்கொரு ஹெல்ப் பண்ணுவியா? என் புள்ளை ஹைதராபாத்திலேர்ந்து வந்திருக்கான். அங்க அசைவம் சாப்பிட்டு அவனுக்கு பழக்கம். அதான் அசைவம் சமைக்கணும்ங்கறான். உன் வீட்டுக்காரர் கடைக்குப் போனார்னா ஒரு அரை கிலோ சிக்கன் வாங்கியாந்து தரச் சொல்லு…”நான் அதிர்ச்சியில் உறைந்தவளாய் நிற்க… டீச்சர் பணத்தை என் கையில் வைத்துவிட்டு சாதாரணமாக சென்றார்.
தொகுப்பு: ஆர்.சுமதி
