வீட்டிலிருந்தே மாற்றத்தை உருவாக்க முடியும்!

நன்றி குங்குமம் தோழி

வீட்டில் பெண்கள் கையில் நிர்வாகம் இருந்தால் அந்த வீடு சுபிட்சம் அடைவது போல் நாட்டின் வளர்ச்சியின் முக்கிய முன்னுதாரணமாக கருதப்படுபவர்கள் சுயதொழில் புரியும் லட்சக்கணக்கான பெண்களை குறிப்பிடலாம். அந்த வரிசையில் திருச்சி திருவானைக்காவலைச் சேர்ந்த கமலா ராஜேந்திரன், ஊட்டச்சத்து நிறைந்த பனிரெண்டுக்கும் மேலான மால்ட்டுகளை வீட்டிலிருந்து தயாரித்து நேரடியாகவும் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்து வருகிறார்.

‘‘கிராமப்புற பெண்களுக்கு நிலையான வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தருவது, நமது பாரம்பரிய உணவுகளை உலகளாவிய தரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்களது தாரக மந்திரம்” என்று மனம் திறந்து பேச ஆரம்பித்தார். ‘‘நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் துறையூர் அருகேயுள்ள அடைக்கம்பட்டி என்ற கிராமம். குடும்பச் சூழ்நிலையால் பத்தாம் வகுப்பு வரைதான் படித்தேன். திருவானைக்காவல் பகுதியில் என் பெரிய அண்ணன் பால் வியாபாரம் செய்து வந்தார். அதனால் படிப்பை நிறுத்திவிட்டு அவருக்கு உதவியாக இருந்தேன். திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஸ்வீட் ஸ்டால் நடத்தி வந்தவர்தான் என் கணவர் ராஜேந்திரன்.

எனக்கு அவருடன் மணமுடித்து வைத்தாங்க. தொழில்ல ஏற்பட்ட நஷ்டத்தினால் அவரால் ஸ்வீட் கடையினை தொடர முடியவில்லை. அதனால் டீக்கடை ஒன்றை ஆரம்பித்தார். அதுவும் கைக்கொடுக்கவில்லை. எனக்கு இரண்டு பசங்க. குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும், தொழிலும் சரியாக நடக்கவில்லை. அதனால் பால் சப்ளை செய்யும் வேலைக்கு என் கணவர் சென்றார்.

அங்கு தொழிலை கற்றுக் கொண்டவர், 1997ல் சொந்தமா பால் சப்ளை செய்யும் தொழிலை ஆரம்பித்தார். ஊரில் விவசாயிகளிடம் இருந்து பாலினை கொள்முதல் செய்து அதை திருவானைக்காவல் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சப்ளை செய்து வந்தார். அவ்வாறு விற்பனைக்கு போக சில லிட்டர் பால் மிச்சமாகும். அதை பால்கோவா, தயிர், மோர், வெண்ணெய், நெய் என தயாரித்து வீட்டில் இருந்தே விற்பனை செய்ய ஆரம்பித்தோம். அதில் வந்த வருமானம் என் பிள்ளைகளின் படிப்புச் செலவிற்கு கைக்கொடுத்தது. என் இரண்டு பசங்களும் நன்றாக படித்து தற்போது நல்ல நிலையில் உள்ளனர்’’ என்றவர், தன் பேரக்குழந்தைக்காக தயாரித்த உணவுகள்தான் அவரின் பிசினஸாக மாறியுள்ளது.

‘‘என் பெரிய மகனுக்கு திருமணமாகி குழந்தை பிறந்த போது அவன் பால் சம்மந்தப்பட்ட உணவுகளை சாப்பிடவே இல்லை. அதனால் அவனுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டது. எப்படி அவனுடைய உடலை தேற்றுவது என யோசித்தேன். அப்போது ABC மால்ட்டினை தயாரித்து பாலில் கலந்து கொடுத்தோம். குழந்தை விரும்பி குடிக்க ஆரம்பிச்சான். அவனுடைய ஊட்டச்சத்துக் குறைபாடும் நீங்கியது.

அதன் பிறகுதான் இதையே ஏன் தொழிலாக ஆரம்பிக்கக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. என் கணவரும், பசங்களும் சப்போர்ட் செய்ய, வீட்டிலேயே மால்ட்டினை தயாரித்து என் கணவர் மூலம் அவர் பால் சப்ளை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்தோம். அவங்க நன்றாக இருப்பதாகக் கூறியது மட்டுமில்லாமல் நல்ல வரவேற்பும் கிடைத்ததால், ‘ராஜ்கமல் ஹெல்த் ஃபுட்ஸ்’ என்ற பெயரில் தொழிலை ஆரம்பித்தோம்.

ABC மால்ட்டுடன் கருப்புக்கவுனி அரிசி கஞ்சி மிக்ஸ், இருபது வகை சிறுதானியங்கள் கலந்த சத்துமாவு, பீட்ரூட் மால்ட் என நான்கு வகை உணவுகளை தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தோம். எங்களின் உணவில் செயற்கை உணவுப் பொருட்கள் எதுவும் கலப்பதில்லை. இயற்கை முறையில் தயாரிப்பதால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. அதன் பிறகு 35% மானியத்துடன் இரண்டரை லட்சம் லோன் பெற்று, மால்ட் தயாரிக்க தேவையான மிஷின்களை வாங்கினோம்.

எங்க வீட்டின் மாடிப் பகுதியினை தயாரிப்புக் கூடமாக மாற்றி அமைத்தோம். பெண்களை வேலைக்கு நியமித்தோம். தற்போது 10 பெண்கள் எங்களிடம் வேலை பார்க்கிறார்கள். எதிர்காலத்தில் 100 பெண்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதே எங்கள் கனவாக இருக்கிறது’’ என்றவர், தான் தயாரிக்கும் உணவுகளை பட்டியலிட்டார்.

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மஞ்சள் மால்ட், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தைத் தரும் செவ்வாழை மால்ட், உடலுக்குக் குளிர்ச்சியை கொடுக்கிற கற்றாழை மால்ட், ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை மால்ட், சளி, காய்ச்சலைத் தடுக்க ஆடாதொடை மால்ட், ராகிமால்ட், நேந்திரம் மால்ட் என எட்டு வகையான மால்ட்டுகளை புதிதாக அறிமுகம் செய்திருக்கிறோம்.

இதனைத் தொடர்ந்து அரிசி, காய்கறிகள் மற்றும் பழங்களை பயன்படுத்தி பெண்கள், ஆண்கள், சர்க்கரை மற்றும் இதய நோயாளிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் பயன்படுத்தும் வகையில் புதிய ஊட்டச் சத்து பானங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது உள்ள மால்ட்டுகளை குளிர்பானம் போல் இன்றைய வாழ்க்கை முறைக்கு ஏற்ப உடனடியாக குடிக்கக்கூடிய வடிவில் மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

சமூக வலைத்தளங்கள் மூலம் திருச்சி, பெரம்பலூர், கும்பகோணம், மதுரை, ஓசூர், ராஜபாளையம், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, குஜராத், ஹைதராபாத், புனே, கொல்கத்தா மட்டுமில்லாமல் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா, துபாய் என வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வருகிறோம்.

வீட்டிலிருந்து தொழில் தொடங்க நினைக்கும் பெண்கள் பலர் தங்களின் கனவுகளை குடும்பப் பொறுப்புகளுக்குள் அடக்கி வைத்திருக்கிறார்கள். தன்னம்பிக்கை இருந்தால், வீட்டிலிருந்தே பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும். வீடுதான் பெண்களின் கனவுகள் உருவாகும் முதல் மேடை என்பதை ஒவ்வொரு பெண்ணும் உணர வேண்டும். அவ்வாறு நினைக்கும் பெண்களுக்கு நிலையான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவது, நமது பாரம்பரிய உணவுகளை உலகளாவிய தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். எங்களின் தயாரிப்புகளை பெரிய பிராண்டாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறோம்” என்றார் கமலா.

தொகுப்பு: மதுரை ஆர்.கணேசன்

Related Stories: