சிறுகதை-ஒரு வழிப்பாதை…

நன்றி குங்குமம் தோழி

ரமணி அம்மாள் இல்லாத எந்த ஒரு விழாவும் சுமதி சுந்தரம் வீட்டில் நடந்தது இல்லை. இருவருக்கும் பொதுவான உறவு… ஒன்றுவிட்ட அத்தை முறை வேண்டும். கூப்பிடக்கூட வேண்டாம் தானாகவே ஆஜராகி விடுவாள். ஈகோ என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவள். கணவன் உற்சாக பானப்பிரியன். ஒரு கட்டத்தில் கடன் தொல்லையால் ஓடிப்போக… வாரிசு இல்லாத நிலையில்… இருக்கும் வீட்டை, நகைகளை விற்று, ஒருவாறு கடன்களை அடைத்தாள். ஒரு வாடகை வீட்டில் குடித்தனம், வாழ்வாதாரம்… காலை, மாலையில் இட்லி வியாபாரம்… ஒரு ஜீவனுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. எப்போது வேண்டுமானாலும் கடவுள் கூப்பிட்டால் போக வேண்டியதுதான் என்ற எண்ணத்தில் பரபரப்புடன் இயங்குபவள்.

அது சுமதி சுந்தரத்தின் மகளுக்கு வளைகாப்பு விழா. ரமணியும் சுமங்கலிகள் வட்டாரத்திலே வலம் வந்தாள். ஒருத்தி ரமணியை உசுப்பும் நோக்கத்தில், ‘வீட்டுக்காரரை பத்தி ஏதாவது தெரிஞ்சுதா..?’ விசாரித்தாள். மற்றொருவளும் ஒத்து ஊதினாள். ‘மனுஷன் எந்த உலகத்தில் இருக்காரோ..?’

ரமணி கலகலவென சிரித்தாள். கணவனால் கிடைக்கும் அங்கீகாரம் இது! விட்டுத்தொலை… ஏதோ இருவர் உரையாடலுக்காவாவது நாம் பயன்படுகிறோமே! அந்த வகையில் சந்தோஷம் என்று நினைத்தபடி கேட்டாள். “நான் உங்களோட இருக்கிறது பிடிக்கலேன்னா, நான் வேணும்னா ஓரமா போய் நிக்கட்டுமா?”

‘அட, அதுக்கில்ல ரமணி… நாம இப்படி ஏதாவது ஒரு விசேஷத்துலதான் பாத்துக்கறோம். சாதாரணமா விசாரிச்சது தப்பா..?’ ஒருத்தி பஞ்சாயத்து செய்ய… ரமணி சிரித்தபடி ‘நான் எப்பவும் சுமங்கலிதான்!’ கட்டைவிரல் உயர்த்தி காட்டினாள். ‘யாராவது பாடுங்களேன்’ என்று யாரோ குரல் கொடுக்க… ‘அலைபாயுதே’ என்று ரமணி சுமாரான குரலில் பாட, பிறகு நல்ல குரல் ஒன்று சேர்ந்து கொள்ள, தன் ஸ்ருதியை குறைத்துக் கொண்டாள் ரமணி. பிறகு நடுவுல எழுந்து, எல்லோருக்கும் மேங்கோ ஜூஸ் கொடுத்தாள். ஒரு பணக்கார தம்பதி, ‘இப்படி கிட்ட கொண்டு வந்து நீட்டறீங்களே’ என்று முகம் சுளிக்க, ‘‘மன்னிச்சுக்குங்க…’’ பணிவாக சொல்லி நகர்ந்தாள் ரமணி.

‘‘ஏம்ப்பா சுந்தரம் சாப்பாடு மாடிலதான?’’

‘‘ஆமாம் அத்தை…’’விடுவிடுவென்று மாடிக்கு ஓடினாள். டேபிள்களை இழுத்துப் ேபாட… அங்கிருந்தவர்கள் தடுத்தனர்.‘‘இந்தாம்மா… நாங்க பாத்துக்கறோம். சாப்பாடு இன்னும் பத்து நிமிஷமாகும்!’’‘‘சரி’’ என்று சிரித்தபடி கீழறங்கினாள். ஒரு சிறுமி, ‘‘பாட்டி பாத்ரூம் போகணும்’ என்று கேட்க… அலேக்காக அதை தூக்கிக் கொண்டு பாத்ரூம் பக்கம் விரைந்தாள்.‘‘உங்களுக்கு எப்படி பளிச் பளிச்சுன்னு புடவை கிடைக்குது…’’ ஒரு விருந்தாளிப் பெண்மணி ரமணியிடம் விசாரிக்க… ‘‘எங்க ஊர்ல ஒரு சேட்டு கடைல எனக்காகவே சூரத்லேர்ந்து வரவழைப்பாரு! நல்லாருக்கா?’ வெகுளியாக கேட்டாள்.‘‘சூப்பர்… ஒரு காட்டு காட்டறீங்க போங்க!’’

உடனே ரமணி புடவையை சரி செய்து கொண்டாள். சுமதி அருகில் வந்து, ‘‘பூ பத்தல அத்தை’’ என்று சொன்னதுதான் தாமதம், ‘‘பக்கத்துல கடை இருக்கு… ஒரே நிமிஷம்’’ என்று ஓட்டமும் நடையுமாக வெளியே வந்தாள். அவள் நேரம் அந்தக் கடை பூட்டியிருந்தது. அருகில் விசாரித்து, பக்கத்து தெருவிற்கு விரைவாக சென்று ஒரு பூப்பந்தை வாங்கிக் கொண்டு திரும்பினாள். பந்தலில் வைத்தாள். தாகமெடுத்தது. ரஸ்னா தயாரிக்கும் இடத்திற்கு சென்றாள். தீர்ந்துவிட்டது என்றார்கள். ‘‘அதிர்ஷ்டகட்டை’’ என்று தனக்குதானே சொல்லிக் கொண்டு நீரை பருகினாள். பிறகு சுந்தரம் தூரத்திலிருந்தே கத்தியபடி கேட்டார். ‘‘அத்தை மாடில சாமி படத்துக்கிட்ட குங்குமம் இருக்கு, கொஞ்சம் எடுத்துக்கிட்டு வர்றீங்களா?’’ சத்தமாக ‘‘சரி’’ என்றாள் ரமணி.

‘‘படிய தாழ வைக்காம உசரமா வெச்சு தொலையரானுங்க…’’ மனதுக்குள்ளே சொல்லியபடி ஏறினாள். தட்டில் நிறைந்த குங்குமத்துடன், வளைகாப்பு பெண்ணை நோக்கி விரைந்தாள். அவசரத்தில் ஒருவர் ரமணியின் முழங்கையை வேகமாக உரச… கொஞ்சம் தட்டிலிருந்த குங்குமம் ஓரத்தில் உட்கார்ந்திருந்த ஒரு பெரிய மனிதர் தோற்றத்திலிருந்தவரின் தலையில் சிந்த, அந்த மனிதர் ‘‘சே’’ என்று ரமணியை முறைத்தார்.

‘‘ஏம்மா பாத்து மெதுவாம்மா… வயசு பொண்ணு கணக்கா துள்ளிக்கிட்டுள்ள போறீங்க… பக்குவம் வேண்டாம்?’’ தன் தலையில் சிந்திய குங்குமத்தை தட்டிக் கொண்டே, வெறுப்பு மற்றும் கோபத்துடன் சொன்னார்.‘‘மன்னிச்சுக்குங்க ஐயா… குங்குமம் தவறினா நல்லதுன்னுதான் சொல்வாங்க…’’ ரமணி பதில் சொல்ல…

‘‘சரி போ… போ… வக்கனையா பேசற?’’ அந்த மனிதர் விரட்டாத குறையாக சொன்னார். ரமணி அங்கு நிற்கவில்லை.

தொடர்ந்து தானாக அல்லது பிறர் சொல்லி என்று, ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருந்தாள் ரமணி.சாப்பாடு ஆரம்பமானது… இரண்டு பந்திகள் முடிந்து கடைசி பந்தி. அதில் சமையல்காரர் அனைவரையும் அமரும்படி சொல்ல… சுமதி, ‘‘அத்தை நீங்களும் உட்காருங்க’’ என்று உபசரித்தாள். இரண்டு வரிசை… சரியா அமர்ந்திருக்க சமையல் உதவியாளர்கள் பரிமாற ஆரம்பித்தனர். சுந்தரமும், சுமதியும் தன் மகள், மருமகனுடன் நடுவில் அமர்ந்தனர்.அப்போது சுந்தரம் ஆபீஸின் மேனேஜர் அங்கு நுழைந்தார்.

‘‘ஓ வாங்க வாங்க சார்…’’ சுந்தரம் பந்தியிலிருந்து எழுந்து சென்று வரவேற்றார்.‘‘முடியற நேரத்துக்கு வந்திருக்கேன். தப்பா நினைக்காதீங்க…’’ மேனேஜர் சொல்ல…‘‘சார், நீங்க வந்ததே பெரிய விஷயம்… வாங்க சார் சாப்பிடலாம்’’ என்று பரபரத்தார். பிறகு பந்தியை நோட்டமிட்டு, ஒரு முனையில் அமர்ந்திருந்த ரமணியை பார்த்து ‘‘அத்தை… அதோ அங்க போய் உட்காருங்க’’ என்று சொல்லி தன் மேனேஜரை அழைத்து சென்றார்.‘‘ஐயோ… அவங்கள ஏன் எழுப்பறீங்க?’’ மேனேஜர் சங்கடப்பட்டார்.

‘‘இல்ல சார்… நீங்க வி.ஐ.பி… அவங்க ரிலேட்டிவ்தான். புரிஞ்சுப்பாங்க’’ என்று மேனேஜரை அமர வைத்தார் சுந்தரம். பிறகு தன் இடத்திற்கு திரும்பினார்.

ரமணி சிரித்துக் கொண்டே, வேறு ஒரு டேபிள் முன்பு தனியாக அமர்ந்து கொண்டாள். அந்த வரிசையில் யாரும் இல்லை!

அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. சுந்தரத்தின் மருமகன் சிவா எழுந்து ரமணியிடம் சென்றான்.

‘‘அத்தை… இங்க நீங்க தனியா சாப்பிட வேண்டாம். மொதல்ல எழுந்து வாங்க’’ என்று கொஞ்சம் அதிகார தோரணையில் சொல்ல… ரமணி ‘‘பரவால்ல தம்பி’’ என்று தயங்க, அடுத்த நொடி ரமணியின் தோளைப் பிடித்து அழைத்து சென்று தான் அமர்ந்த இடத்தில் அமர வைத்தான்.

சுந்தரம், ‘‘மாப்ள… நீங்க சாப்பிடல?’’

‘‘இல்ல மாமா… எனக்கு பசியில்ல… அப்பறமா சாப்பிடறேன்’’ என்றான். ‘‘என்னங்க நீங்க?’’ என்று மனைவி கேட்க, ‘‘பரவால்ல அத்தை கூட உட்கார்ந்து சாப்பிடு… இவங்க ஆசீர்வாதம் ரொம்ப முக்கியம்’’ என்றான் சிவா. ரமணிக்கு சங்கடமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. பந்தி முடிந்தது. சிவா ரமணியை அழைத்துக் கொண்டு சற்று கூட்டமில்லாத இடத்திற்கு சென்றான். ‘‘அத்தை நானும் உங்களை காலையிலேர்ந்து கவனிச்சுக்கிட்டு வர்றேன்.

ஏதோ… இது உங்க வீட்டு விசேஷம் மாதிரி, பம்பரமா சுத்தி சுத்தி வேலை செய்யறீங்க. அந்த ஆளு குங்குமம் தவறினதுக்கு முறைச்சாரு. நீங்க சிரிச்சுக்கிட்டே போனீங்க… பந்தில எழுந்திருன்னு சொன்னாலும், சாதாரணமா எடுத்துக்கறீங்க. எப்படிம்மா… எப்படி இப்படி நடந்துக்க முடியுது! எவ்வளவு உயர்ந்த மனசு உங்களுக்கு..? இந்த குணம் எங்கேருந்து வருது? பணிவுக்கே பணிவு காட்டுறீங்களே..? எப்படிம்மா..?’’ ஆவலாக கேட்டான் சிவா.

ரமணி ஏதும் பேசவில்லை. எங்கோ பார்த்தாள். ‘‘தம்பி… எனக்கு வாழ்க்கை பெருசா அமையல… புருஷன் எங்கேயோ ஓடிப்போயிட்டாரு… புள்ள குட்டிங்க இல்ல. எனக்குன்னு பெரிய கடமை இல்ல. வாழணுமே… அதுக்காக ஊர்ல இட்லி கடை நடத்தறேன். சொந்தக்காரங்க வீட்டு விசேஷத்துக்கு கூப்பிட்டாலும், கூப்பிடாட்டாலும் வலிய போவேன். நாலு ஜனத்தை பாத்தா, ஏதோ மனசுக்கு சந்தோஷம்.

அவங்க என்னை எப்படி பார்த்தாலும் எனக்கு கவலையில்லை தம்பி. எனக்குன்னு என்ன இருக்கு பெருசா..? பணமா… பகட்டா… சொத்தா… அதிகாரமா.. பதவியா… எதுவுமில்லப்பா… நான் ஒரு சாதாரண மனுஷி. ஆனா, மத்தவங்களுக்கு கொடுக்க ஒன்னே ஒண்ணு இருக்கு. அது அன்பு! அது தாராளமா அள்ளிக் கொடுத்தா… நான் கொறைஞ்சா போய்டுவேன்? அவங்க என் அன்பை ஏத்துக்கிட்டாலும்… இல்லைன்னாலும்… எனக்கு எந்த கஷ்டமோ… நஷ்டமோ இல்லையே. அன்பை கொடுத்துக்கிட்டே போற பாதைதான் என் வாழ்க்கைன்னு தீர்மானிச்சிட்டேன்.

இது ஒருவழிப்பாதைன்னு தெரியும். பதிலுக்கு நான் எதையும், யார்கிட்டேயும் எதிர்பார்க்கலியே..? நாலு பேர் கூடற எடத்துல சிரிச்சுக்கிட்டு, அன்பா பேசி, ஏதாவது ஒரு வேலையை இழுத்துப் போட்டு செய்யறதுல ஒரு சந்தோஷம் கிடைக்குது தம்பி. யாரு எங்க எவ்வளவு காலம் இருக்கப் போறோமோ..? இருக்குற வரைக்கும் நல்லதை விதைச்சிட்டுப் போகணும். சில பேரோட தப்பான சொல், செயல், இதை என் மனசுல ஏன் ஏத்திக்கணும்? எல்லாருமா கெட்டவங்க… இப்ப நீங்க அனுசரணையா வந்து பேசல..? வாழ்க்கைய ஓட்டணும்… ஏதோ எனக்கு தெரிஞ்ச பாதைல போறேன். சுகமா இருக்கு! ஆனா, நீங்க என்னமோ உயர்ந்த குணம் அது… இதுங்கறீங்க.

அப்படி எதுவுமில்ல தம்பி…’’ரமணி சொல்ல சிவாவால் ஏதும் பேச முடியவில்லை. ‘‘அம்மா உங்க மனசு எனக்கு புரியுது. எனக்கு ஏதாவது சொல்லி ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா…’’ சிவா கேட்க, ‘‘இத சொல்ல எனக்கு அருகதை இருக்கோ இல்லியோ தெரியல. நாம மட்டும் வாழறது வாழ்க்கை இல்லை. முடிஞ்சவரைக்கும் மத்தவங்களுக்கு உதவி செய்யணும். பணமோ பொருளோ இல்லாவிட்டாலும் சரீரத்துலயாவது செய்யணும். அதுவும் இல்லையா… மத்தவங்க நல்லா இருக்கணும்னு வாழ்த்தணும். அதுவே பெரிய உதவி தம்பி’’ என்று சொல்ல, ரமணி அம்மாளின் காலை தொட்டு வணங்கினான் சிவா. ரமணியோ பதறினாள். ‘‘தம்பி… என்ன பண்றீங்க..?’’‘‘ஏம்மா… நான் என் சந்தோஷத்துக்காக இத செய்யக்கூடாதா…’’ என்று கேட்டான். ரமணியும் கண் கலங்கினாள். அங்கு ஒரு தெய்வீக மௌனம் நிலவியது.

தொகுப்பு: கீதா ஸ்ரீ நிவாசன்

Related Stories: