கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

*தேங்காய் சாதம் செய்ய தேங்காய்ப்பால் எடுக்கும்போது கொஞ்சம் சமையல் உப்பை சேர்த்தால் நிறைய பால் கிடைக்கும்.

*வெண்ணெய் காய்ச்சிய பிறகு வாணலியை உடனே தேய்க்காமல் அதில் உருளைக்கிழங்கை வதக்கினால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

*அப்பளம், வற்றல், வடகம் இவற்றில் காய்ந்த சிவப்பு மிளகாயை போட்டு வைத்தால் பூச்சி உண்டாகாது.

*5 அல்லது 6 நெல்லை தண்ணீரில் கழுவி பாலில் போட்டு வைத்தால் பால் ஒரு நாள் முழுவதும் கெடாமல் இருக்கும்.

– கோ.ரம்யாஸ்ரீ , கிருஷ்ணகிரி.

*இனிப்பு பலகாரங்கள் செய்யும் போது ஒரு கல் உப்பு போட்டு சமைத்தால் இனிப்பு திகட்டாமல் சுவையோடு இருக்கும்.

*பூசணிக்காய் துண்டுகளை சுத்தமான தண்ணீரில் போட்டு வைத்தால் அது மறுநாள் வரை அழுகாமல் இருக்கும்.

*காய்கறிகளை நறுக்கும் போது பெரிய துண்டுகளாக போட்டால் சத்துகள் வீணாகாமல் அப்படியே இருக்கும்.

– எஸ்.மலர்விழி கோவிந்தசாமி, கிருஷ்ணகிரி.

*பாகற்காய் பொரியல் செய்யும் போது கேரட், வெங்காயம் துருவிப்போட்டு நிறைய கறிவேப்பிலை சேர்த்தால் கசப்பே தெரியாது.

*வடாம் மாவில் சிறிது சோம்பு கலந்து காய வையுங்கள். பொரிந்து சாப்பிடும் போது சுவையாக இருக்கும்.

*ரவா இட்லி செய்யும் போது சேமியாவை வறுத்து ரவையுடன் தயிரில் ஊறவைத்து செய்தால் ருசியாக இருக்கும்.

– க.நாகமுத்து, திண்டுக்கல்.

*இஞ்சி மலிவாக கிடைக்கும் போது மேல் தோல் நீக்கி சிறு துண்டுகள் செய்து மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து அரைத்து ஒரு பாட்டிலில் இந்த சாறை வடிகட்டி வைத்துக் கொண்டால் சமயத்திற்கு உதவும். ஃப்ரீசரில் வைத்து விட்டால் கெட்டுப் போகாது.

இதை, டீ, காபி போன்றவற்றில் ஒரு ஸ்பூன் சேர்த்து குடித்தால் பித்தம், மயக்கம், வயிற்று உபாதைகள் நீங்கி விடும். இஞ்சி சேர்க்கும் பண்டங்களுக்கு இஞ்சி சாறை சேர்க்கலாம். இஞ்சி, சீரகம், தனியா (கொத்தமல்லி விதை) இம்மூன்றையும் ஊறவைத்து அரைத்து சம அளவு வெல்லம் சேர்த்து சிறிது நெய், தேன் சேர்த்து கிளறி வைத்துக் கொண்டால் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு சாப்பிட அஜீரணத்திற்கு நல்லது.

*இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை உப்பு, வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து ஒரு டம்ளர் ஜூஸ் சாப்பிட, சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகி விடும். தலை சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை எளிதில் நீங்கிவிடும்.

*இஞ்சி, புளி, உப்பு, மிளகாய் வற்றல் வறுத்து பெருங்காயம், துளி வெல்லம் சேர்த்து அரைத்து துவையலாக செய்து சாப்பிட உணவு எளிதில் ஜீரணமாகிவிடும். துவையல் மீந்துவிட்டால் எண்ணெ சேர்த்து சுருள கிளறி கடுகு தாளித்துவிட இஞ்சி தொக்கு தயார்.
– ஜி.ராஜேஸ்வரி, சென்னை.

*சாம்பார் செய்யும் போது புளிப்பு சுவை அதிகமாகிவிட்டால், சிறிதளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து அது கரையும் வரை கொதிக்க வைக்கவும். சாம்பாரின் சுவை அதிகரிப்பதற்கு குழம்பை இறக்கும்போது ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளவும்.

*பூண்டின் தோலை உரிக்க நேரம் நிறைய பிடிக்கும். பூண்டை தனித்தனியாக எடுத்துக் கொண்டு, சூடான தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து உரித்தால் ஈசியாக உரித்து விடலாம்.

*பாயசம் செய்யும் போது, பால் திரிந்து போனால் இரண்டு சிட்டிகை சமையல் சோடாவை போட்டால் திரிந்த பால் சரியாகி விடும்.

– விஜயலட்சுமி, வேலூர்.

Related Stories: