குமரியில் ‘நட்பு’… கேரளாவில் ‘நேருக்கு நேர்’: எல்லை தாண்டியதும் மாறும் அரசியல் நிறங்கள்

அரசியலில் ‘நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை’ என்ற பழமொழிக்கு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது கன்னியாகுமரி மாவட்டமும், அதன் அண்டை மாநிலமான கேரளாவும். சுமார் 10 கிலோமீட்டர் இடைவெளியில், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையிலான அரசியல் நிலைப்பாடு அப்படியே தலைகீழாக மாறுவது வாக்காளர்கள் மத்தியில் வியப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மிக நெருக்கமான நட்பு பாராட்டி வருகின்றன. குறிப்பாக, குமரி மாவட்டத்தில் பா.ஜவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு இந்த இரு கட்சிகளும் கைகோர்த்துள்ளன. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடும்போதும், சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் களமிறங்கும்போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் செங்கொடியை ஏந்தி காங்கிரஸ் வேட்பாளருக்காக வாக்கு சேகரிப்பதைக் காணலாம். ‘மதச்சார்பற்ற கொள்கைக்காகவும், பாசிசத்தை எதிர்க்கவும் நாங்கள் இணைந்து நிற்கிறோம்’ என்பது இவர்களின் வாதமாக உள்ளது.

ஆனால், குமரி மாவட்டத்தின் எல்லையான களியக்காவிளையைத் தாண்டி கேரளாவுக்குள் நுழைந்தால் காட்சி அப்படியே மாறுகிறது. கேரளாவில் ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும் (எல்டிஎப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் (யுடிஎப்) இடையேதான் பிரதானப் போட்டியே நடக்கிறது.

அங்கே இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொள்கின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயனை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சிப்பதும், ராகுல் காந்தியை இடதுசாரி தலைவர்கள் விமர்சிப்பதும் அங்கு அன்றாட அரசியல் நிகழ்வு. குமரியில் காங்கிரஸ் வேட்பாளருக்காக வேலை செய்யும் அதே மார்க்சிஸ்ட் தொண்டர், கேரள எல்லைக்குள் நுழைந்தால் காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடிக்க முழு வீச்சில் களப்பணியாற்றுவார்.

இந்த விசித்திரமான சூழல் குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், ‘தேசிய அளவில் பாஜகவை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இந்த இரு கட்சிகள் இருந்தாலும், கேரளா போன்ற மாநிலங்களில் இரு கட்சிகளுக்கும் இடையேதான் அதிகாரப் போட்டி உள்ளது. அங்கு அவர்கள் கூட்டணி வைத்தால், எதிர்க்கட்சி என்ற இடத்தைப் பாஜக பிடித்துவிடும் என்ற அச்சமும் அவர்களுக்கு உண்டு’ என்கின்றனர். இது குறித்து உள்ளூர் தொண்டர்களிடம் கேட்டபோது, ‘இது ஒரு வகை அரசியல் யதார்த்தம். தமிழகத்தில் எங்கள் எதிரி பாஜ. கேரளாவில் எங்களுக்கிடையே கொள்கை ரீதியான போட்டி. மாநில எல்லைகளைப் போல அரசியல் நிலைப்பாடுகளும் மாறுபடுவதில் ஆச்சரியமில்லை’ என்கின்றனர் முதிர்ச்சியுடன்.

Related Stories: