நெல்லியாம்பதி டீ எஸ்டேட் பகுதியில் தொழிலாளர் குடியிருப்பில் காட்டுயானை அட்டகாசம்

*வீட்டைவிட்டு வெளியே வர மக்கள் அச்சம்

பாலக்காடு : நெல்லியாம்பதி டீ எஸ்டேட் பகுதியிலும், தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியிலும் காட்டுயானை புகுந்து அட்டகாசம் செய்கிறது.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெல்லியாம்பதி மலைப்பகுதியில் சிறுத்தை,கரடி,காட்டுமாடு, காட்டு யானைகள், மான்கள் மற்றும் சிங்கவால் குரங்குகள் என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

இவை தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியின் காரணமாக காட்டைவிட்டு வெளியேறி தண்ணீர் மற்றும் உணவு தேடி மக்கள் வசிக்கின்ற பகுதிகளுக்குள் புகுந்து அங்குள்ள தோட்டப்பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. வன விலங்குகள் அட்டகாசம் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வீட்டைவிட்டு வெளியே வர அச்சமடைகிறார்கள்.

பகல் நேரங்களிலும் நெல்லியாம்பதியில் தொழிலாளர்கள் வசிக்கின்ற குனம்பலம் பகுதியிலுள்ள டீ எஸ்டேட் அருகே காட்டு யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் உலா வந்தவாறு உள்ளன. நெல்லியாம்பதி-போத்துண்டி சாலையில் அய்யப்பன்திட்டு கொண்டை ஊசி வளைவு சாலையில் யானை வாகனங்களை வழிமறிக்கின்றன.

இதனால் தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்ப முடியாமலும், வெளியே வர முடியாமலும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். சுற்றுலா பயணிகள் வருகையும் பாதிக்கப்படுகிறது.

வன பாதுகாவலர்கள் காட்டு யானைகளை கண்காணித்து விரட்டியடித்தாலும், மீண்டும் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கும், தோட்ட பகுதிகளுக்கும் வந்து அச்சுறுத்துகின்றன. எனவே வனத்துறையினர் மக்களையும், வாகன ஓட்டிகளையும் எச்சரித்து வருகிறார்கள்.

வாகன ஓட்டுநர்கள் கவனித்து செல்லவேண்டும். சாலைகளில் கடக்கும் வனவிலங்குகளை ஒருபோதும் துன்புறுத்தக்கூடாது. ஒலியெழுப்பி அவற்றை தொந்தரவு செய்யக்கூடாது. எந்தநேரத்திலும் வாகனத்தை விட்டு கீழே இறங்கி புகைப்படங்கள், வீடியோக்கள் எடுக்க முற்படக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: