ஈரான் உச்ச தலைவர் படுகொலை: காஷ்மீரில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஸ்ரீநகர்: ஈரான் உச்ச தலைவர் கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நீடித்து வந்த போர் பதற்றத்தின் உச்சகட்டமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த தகவல் வெளியானதை அடுத்து, டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தின் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன், லக்னோ மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் துக்க ஊர்வலங்கள் நடந்தன. போர் அபாயம் அதிகரித்துள்ளதால் ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இச்சம்பவத்தைக் கண்டித்து காஷ்மீரின் ஸ்ரீநகர், சோனவாரி, பந்திப்போரா மற்றும் மாகம் போன்ற பகுதிகளில் இன்று நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி கண்டன பிரசாரம் மேற்கொண்டனர். ஸ்ரீநகரின் லால் சவுக்கா மற்றும் சைதா கடலில் குவிந்த ஷியா பிரிவு மக்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக முழக்கமிட்டதுடன், இக்கொலையை மனிதாபிமானமற்ற செயல் எனக் கண்டித்து காங்கிரஸ் கமிட்டி தனது அரசியல் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளது. நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ள முதல்வர் உமர் அப்துல்லா, ‘ஈரானில் தங்கியுள்ள காஷ்மீர் மக்களின் பாதுகாப்பு தொடர்பாக ஒன்றிய அரசின் வெளியுறவு அமைச்சகத்துடன் மாநில அரசு தொடர்ந்து பேசி வருகிறது’ என்று தெரிவித்தார்.

Related Stories: